2016-12-29 15:50:00

2016ம் ஆண்டைக் குறித்து ஐ.நா.வின் ஆண்டறிக்கை


டிச.29,2016. 2016ம் ஆண்டு, அனைத்துலக சமுதாயத்திற்கு சவால்கள் நிறைந்த ஆண்டாக இருந்தது என்றும், சிரியா, தென் சூடான், ஏமன் ஆகிய நாடுகளில் நிலவிய மோதல்களால், உலகெங்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 50 இலட்சத்திற்கும் அதிகமாக வளர்ந்தது என்றும், ஐ.நா.வின் ஆண்டறிக்கை கூறுகிறது.

நிறைவுக்கு வரும் 2016ம் ஆண்டைக்குறித்து, டிசம்பர் 28, இப்புதனன்று ஐ.நா. அவை வெளியிட்ட அறிக்கையில், இவ்வாண்டு, மிக அதிகமான வெப்பத்தை பதிவு செய்த ஆண்டாக இருந்ததென்றும், இதே ஆண்டில், சுற்றுச்சூழல் குறித்து பாரிஸ் உச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தம், வரலாற்று சிறப்பு மிக்கதாக இருந்ததென்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாண்டு இறுதியில் தன் பொறுப்பை நிறைவு செய்யும் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள், 2010ம் ஆண்டு, காலரா நோயினால் ஹெயிட்டி மக்கள் துன்புற்றவேளையில் அவர்களுக்குத் தகுந்த உதவிகள் செய்ய இயலாமல் போன வேளையில், அந்நாட்டில், 9000த்திற்கும் அதிகமானோர் இறந்ததற்கு மன்னிப்பு கேட்டதை, இவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே, 2016ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்கள், நல்ல விளைவுகளை உருவாக்கி, நம்பிக்கையைத் தந்தாலும், தொடர்ந்து வந்த மாதங்களில் மிக அதிகமான அழிவுகளையும் உலக சமுதாயம் சந்தித்துள்ளது என்று, இவ்வாண்டைக் குறித்து கருத்து வெளியிட்ட, ஐ.நா. உயர் அதிகாரி, Paulo Sérgio Pinheiro அவர்கள் கூறியுள்ளார்.

இதுவரை மனித வரலாற்றில் நிகழாத அளவு, 2016ம் ஆண்டில், அப்பாவி பொதுமக்கள் மீது அரசுகளும், போராளிகளும் தாக்குதல்கள் நிகழ்த்தியதால், பொதுமக்களுக்கு பெரும் அழிவைத் தந்த ஆண்டு இது என்று, Pinheiro அவர்கள் இப்புதனன்று கருத்து வெளியிட்டார்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.