2016-12-29 15:43:00

சுவிட்சர்லாந்தில் ஏற்றுக்கொள்ள முடியாத சமத்துவமின்மை


டிச.29,2016. சுவிட்சர்லாந்து நாட்டில், 5,30,000 மக்கள் வறுமையில் வாடுகின்றனர் என்றும், 1,20,000த்திற்கும் அதிகமானோர் வேலையேதும் இன்றி தவிக்கின்றனர் என்றும் அந்நாட்டு காரித்தாஸ் அமைப்பு, இப்புதனன்று, அறிக்கையொன்றை வெளியிட்டது.

நாட்டில் உள்ள 5 இலட்சத்திற்கும் அதிகமானோர், அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் சக்தியின்றி வாழ்கின்றனர் என்றும், வேலையின்றி தவிக்கும் மக்கள், ஒவ்வொரு மாதமும் 3000த்திற்கும் கூடுதலாக அதிகரித்து வருகின்றனர் என்றும் இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

சமுதாய நலன், தொழில் பயிற்சிகள், கட்டாயக் கல்வி என்ற திட்டங்களுக்கு அரசு ஒதுக்கிவந்த நிதி குறைந்து வருவதால், தகுந்த தொழில் திறமைகளை வளர்த்துக்கொள்ள இயலாமல், இளையோர் இருக்கின்றனர் என்று, இவ்வறிக்கை கூறுகிறது.

நாட்டின் செல்வத்தில் 33 விழுக்காட்டிற்கும் மேலாக, மேல்தட்டைச் சேர்ந்தவர்கள் கையில் இருப்பதும், மிகக் கீழ் மட்டத்தில் இருப்போருக்கு 3.3 விழுக்காடு செல்வமே உள்ளது என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத சமத்துவமின்மை என்று, காரித்தாஸ் வெளியிட்ட அறிக்கை எடுத்துரைக்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.