2016-12-30 15:35:00

விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல்


டிச.30,2016. பாகிஸ்தானில், கிறிஸ்மஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றில், விஷச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் உறவுகளுக்கு, அந்நாட்டு, தேசிய நீதி மற்றும் அமைதி அவை (NCJP), தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளது.

இந்த அவையின் தலைவரான, Faisalabad ஆயர் ஜோசப் அர்ஷத் (Joseph Arshad) அவர்கள், இதில் பலியானவர்களின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் சொன்னதோடு, அந்நாட்டின் கிறிஸ்தவ சமுதாயத்திற்கு, தனது அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.

கவலைதரும் இந்நிகழ்வு, மகிழ்வான கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை அழுகையாக மாற்றியுள்ளது என்றும் கூறிய, ஆயர் அர்ஷத் அவர்கள், மருத்துவமனையில் கவலைக்கிடமாய் உள்ள மேலும் பலரையும் சந்தித்துச் செபித்துள்ளார்.

Toba Tek Singh என்ற இடத்தில் நடந்த இந்த நிகழ்வில், விஷச்சாராயம் குடித்தவர்களில் 43 பேர் இறந்துள்ளனர். இன்னும் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இதில் பலியானவர்களில், அதிகமானோர் கிறிஸ்தவர்கள்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பாகிஸ்தானில், முஸ்லிம்கள் மதுபானம் அருந்துவது, 1977ம் ஆண்டிலிருந்து, தடை செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில், மதுபானத் தடை முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி வருவதாக, கிறிஸ்தவ ஆர்வலர்கள், ஆசியச் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.