2017-01-02 16:20:00

அன்னை மரியா வழியாக நாமனைவரும் ஒரே குடும்பத்தினர்


சன.02,2017. நாம் அனநாதைகள் அல்ல, நமக்கொரு அன்னை இருக்கிறார் என்ற எண்ணம், நாமனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நோக்கி இட்டுச் செல்கிறது என இப்புத்தாண்டு திருப்பலியில் மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புத்தாண்டு தினத்தன்று திருஅவை சிறப்பிக்கும் இறைவனின் தாய் அன்னை மரியா என்ற திருவிழாவையொட்டி, தூய பேதுரு பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விவிலியத்தில் அன்னை மரியா அதிகம் பேசியதாக காணப்படவில்லையெனினும், இறைவனின் மீட்புத்திட்டம் குறித்து அவர் கவனமாயிருந்து, ஆதிக் கிறிஸ்தவ சமூகத்தின் வளர்ச்சியில் அக்கறையுடன் செயல்பட்டார் என்று கூறினார்.

இறைவனின் தாயாகவும், நமதன்னையாகவும் ஆண்டின் முதல் நாளில் அன்னைமரியாவை நோக்குவது என்பது, ஆண்டு முழுவதும் நம்முடன் வரவிருக்கும் ஓர் உறுதிப்பாட்டை நினைவுகூர்வதாகும் எனவும் எடுத்தியம்பிய திருத்தந்தை, அன்னையர்களற்ற ஒரு சமூகம், இதயத்தை இழந்த ஒரு சமூகமாக இருக்கும் என்றார்.

அன்னையர்கள், இன்கனிவுக்கும், தியாகத்திற்கும், நம்பிக்கையின் பலத்துக்கும் புகழ்பெற்றவர்கள் என்பதையும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறையிலுள்ள குழந்தைகளின் அன்னையர், நோயாளிச் சிறார்களின் அன்னையர், போதைப்பொருள்களுக்கு அடிமையான இளையோரின் அன்னையர், புலம்பெயர்ந்தோர் முகாமிலுள்ள அன்னையர் என பலரிடமிருந்தும் தான் அதிக பாடங்களைப் பயின்றுள்ளதாகக் கூறினார்.

ஆன்மீகத்தில் நாம் அநாதைகளாக மாறிவிடாமல் நம்மை காப்பாற்றுபவர், நம் அன்னையரே என மேலும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.