சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ எழுத்து வடிவில்

சிறாரைப் பாதுகாப்பதற்கு ஆயர்களுக்கு திருத்தந்தை அழைப்பு

உரோம் குழந்தை இயேசு மருத்துவமனையில் திருத்தந்தை - AFP

03/01/2017 15:10

சன.03,2017. உலகில், பல்வேறு நிலைகளில் துன்புறும் மற்றும் பயன்படுத்தப்படும் சிறாரைப் பாதுகாப்பது, ஆயர்களின் கடமை என்பதை நினைவுபடுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 28ம் தேதி கடைப்பிடிக்கப்பட்ட மாசற்ற குழந்தைகள் விழாவன்று, உலக ஆயர்களுக்குக் கடிதம் எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகில், சிறாரைப் பாதுகாப்பதற்கு, அதிக அளவில் முயற்சிகளை எடுக்குமாறும் ஆயர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏரோது அரசன் குழந்தைகளைக் கொலை செய்த நிகழ்வை மையப்படுத்தி, இக்கடிதத்தை எழுதியுள்ள திருத்தந்தை, வரலாற்றில் நடந்த அந்தக் கவலைதரும் நிகழ்வு, இன்றும் எழுதப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்றும், அந்த வேதனையின் அழுகுரலை, இன்றும்கூட நம் இதயங்களில் கேட்கின்றோம் என்றும், கூறியுள்ளார்.

ஏரோதால் கொலைசெய்யப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு, இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, துன்பம் நிறைந்த காலமாக இருந்தது என்றும், இன்றும், நாம் விரும்பியோ விரும்பாமலோ, கிறிஸ்மஸ், கண்ணீரோடு சேர்ந்து வந்துள்ளது என்றும், அக்கடிதத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை.

நம் சிறாரின் மாசற்ற தன்மையை விழுங்குவதற்கு பேராவலுடன் இருக்கும், நம் காலத்தின் புதிய ஏரோதுகளிடமிருந்து, சிறாரைப் பாதுகாப்பதற்கு, கிறிஸ்தவர்களுக்குத் துணிச்சல் அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சட்டத்திற்குப் புறம்பேயான அடிமைத் தொழில், அடக்குமுறை, பாலியல் மற்றும் தவறாகப் பயன்படுத்தும் நடவடிக்கைகளால், சிறாரின் மாசற்றதன்மை, திருடப்படுகின்றது எனவும் கவலை தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

திட்டமிட்டக் குற்றக் கும்பல்கள் மற்றும் மரண வர்த்தகர்களிடம் ஆயிரக்கணக்கான சிறார் சிக்கியுள்ளனர் எனவும், அருள்பணியாளர்களால் பாலியல்முறையில் பயன்படுத்தப்பட்ட சிறாரின் துன்பங்களையும், வேதனைகளையும் திருஅவை சிறப்பாக நினைவுகூர கடமைப்பட்டுள்ளது எனவும், எழுதியுள்ளார் திருத்தந்தை.

அருள்பணியாளர்களின் இத்தகைய நடவடிக்கைகளை, சகித்துக்கொள்ள முடியாதவாறு, திருஅவை கொள்கைகளைக் கொண்டிருக்க வேண்டுமென்றும் கூறியுள்ள திருத்தந்தை, மனித வாழ்வை, குறிப்பாக, இக்காலத்தின் மாசற்ற குழந்தைகளின் வாழ்வைக் கிறிஸ்தவர்கள் ஆதரிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.  

பசியினால் இறக்கும் நிலைக்குத் தள்ளப்படும் சிறார், கட்டாயமாகப் புலம்பெயர்கின்ற, போரிடவும், வேலைசெய்யவும் கட்டாயப்படுத்தப்படுகின்ற, கல்வி மறுக்கப்படுகின்ற, பாலியலில், குறிப்பாக, சிறாரைப் பாதுகாக்கவேண்டிய திருஅவை மனிதர்களாலேயே பயன்படுத்தப்படுகின்ற... இத்தகைய சிறாரைப் பாதுகாக்க வேண்டியது ஆயர்களின் கடமை என்பதை நினைவுபடுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

03/01/2017 15:10