2017-01-03 14:59:00

தீர்மானங்களில், உறவுகளில், செயல்களில் வன்முறையை விலக்க...


சன.03,2017. “நம் தீர்மானங்கள், நம் உறவுகள் மற்றும் நம் செயல்களில், வன்முறையற்றதன்மை முத்திரை பதிப்பதாய் இருப்பதாக”என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்செவ்வாயன்று, வெளியிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தாக்குதல்களும், வன்முறைகளும் அதிகரித்துவரும் இன்றைய உலகை, வன்முறையற்ற உலகமாக அமைப்பதற்கு, தொடர்ந்து குரல் கொடுத்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாளைய தனது டுவிட்டர் செய்தியிலும், அதனை வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கிடையே, இடைக்கால போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டுவரும் சிரியாவில், அரசுக்கும், புரட்சியாளர்களுக்கும் இடையே, அமைதிக்கான உரையாடலுக்கு இரஷ்யாவும், துருக்கியும் முயற்சித்து வருகின்றன. ஆயினும், இந்த உரையாடலில் கலந்துகொள்ளப்போவதில்லை என, புரட்சிக் குழுக்கள் கூறுவதாக, ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

இந்த அமைதிக்கான உரையாடலை, கஜகஸ்தான் நாட்டின் Astanaவில் நடத்த, திட்டமிடப்பட்டுள்ளது.  

மேலும், கடந்த ஆண்டில் மத்திய இத்தாலியில் நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட மக்களை, சனவரி 05, இவ்வியாழனன்று வத்திக்கானில் சந்திக்கவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த ஆகஸ்ட் 24, 26 மற்றும், அக்டோபர் 30ம் தேதிகளில் நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட Spoleto-Norcia உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த ஏறக்குறைய 800 பேர் திருத்தந்தையைச் சந்திக்கவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு அக்டோபரில், எவ்வித முன்னறிவிப்பின்றி, திருத்தந்தை அங்குச் சென்று, அம்மக்களைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.