2017-01-04 15:40:00

திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியைத் தொடர்வோர், 3,20,00000


சன..04,2017. "வன்முறையற்ற அகிம்சை வழியைக் குறித்து, இயேசு சொல்லித்தந்தவற்றை முழுமையாக ஏற்று பின்பற்றுவது, அவரது உண்மையான சீடர்களின் இலக்கணம்" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன.

வன்முறையற்ற அகிம்சை, ஓர் அரசியல் வழிமுறையாக அமைய வேண்டும் என்ற கருத்தை, சனவரி முதல் தேதியன்று வெளியிட்ட உலக அமைதிநாள் செய்தியின் கருவாக, திருத்தந்தை வழங்கினார் என்பது, குறிப்பிடத்தக்கது.

மேலும், திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகளைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை, 2017ம் ஆண்டின் துவக்கத்தில், 32 மில்லியன், அதாவது, 3 கோடியே 20 இலட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.

@pontifex என்ற முகவரியுடன், ஒன்பது மொழிகளில் திருத்தந்தை வெளியிட்டுவரும் டுவிட்டர் செய்திகளைப் பின்பற்றுவோரில், இஸ்பானியர்கள், 1 கோடியே 20 இலட்சம் என்றும், அதற்கடுத்ததாக, ஆங்கில மொழியினர், 1 கோடியே 2 இலட்சம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தையின் செய்திகளை, இலத்தீன் மொழியில் பின்பற்றுவோர், 7 இலட்சத்து 35,000 பேர் என்பதும், அரேபிய மொழியில் பின்பற்றுவோர், 3 இலட்சத்து 50,000 என்பதும் குறிப்பிடத்தக்கன.

தன் தலைமைப் பொறுப்பைத் துறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாக, 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியை முதன்முதலாக வெளியிட்டார்.

அவரைத் தொடர்ந்து, தலைமைப் பொறுப்பேற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "அன்பு நண்பர்களே, என் உள்ளத்திலிருந்து உங்களுக்கு நன்றி சொல்கிறேன்; எனக்காகத் தொடர்ந்து செபியுங்கள்" என்ற வார்த்தைகளை, 2013ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் தேதி, தன் முதல் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.