2017-01-05 15:57:00

இளையோரின் ஒப்புதல், பொங்கியெழும் தூய நீருக்கு சமம்


சன.05,2017. இளையோர் கூறும் 'ஆம்' என்ற ஒப்புதல், பூமிக்கடியிலிருந்து பொங்கியெழும் தூய்மையான நீருக்கு சமம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த ஒரு குழுவினரிடம் கூறினார்.

இறை அழைத்தலை ஊக்குவிக்கும் மேய்ப்புப்பணி அக்கறையை மையப்படுத்தி, இத்தாலிய ஆயர் பேரவை, உரோம் நகரில் நடத்திய ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்ட 800க்கும் அதிகமான உறுப்பினர்களை, இவ்வியாழன் காலை, அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்தத் திருத்தந்தை, இறை அழைத்தலுக்கு இளையோர் தரும் சம்மதத்தை, ஓர் நீர் ஊற்றுக்கு ஒப்புமைப்படுத்திப் பேசினார்.

தூய்மையான நீர், நாம் மேற்கொள்ளும் பயணத்திற்கு, சக்தி சேர்ப்பது போல, இறைவனின் அழைத்தலுக்கு இளையோர் தரும் சம்மதம், அவர்கள் மேற்கொள்ளும் பணிவாழ்வு என்ற பயணத்திற்குத் தேவையான சக்தியை வழங்குகிறது என்று, தன் உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

இளையோரையும், இறை அழைத்தலையும் மையப்படுத்தி இத்தாலிய ஆயர் பேரவை ஏற்பாடு செய்த இந்தக் கருத்தரங்கு, 2018ம் ஆண்டு கூடவிருக்கும் உலக ஆயர் மாமன்றத்திற்கு தகுந்ததொரு தயாரிப்பு என்பதையும், திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

இறையழைத்தலை ஊக்குவித்து, திருஅவை ஏடுகளும், திருத்தந்தையரும் கூறியுள்ள கருத்துக்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையில் எடுத்துக்காட்டுகளாக வழங்கினார்.

இறையழைத்தல் பணியில் ஈடுபட்டிருப்போர், எண்ணிக்கை என்ற அளவில் தங்கள் பணியை அளவிடாமல், இளையோருடன் பயணிப்பது, தேர்ந்து தெளிவதில் அவர்களுக்கு உதவுவது என்ற வழிகளில் தங்கள் பணியின் பயனை அளவிடவேண்டும் என்று, திருத்தந்தை, கருத்தரங்கு உறுப்பினர்களிடம் நினைவுறுத்தினார்.

இறை அழைத்தலை ஊக்குவிக்கும் மேய்ப்புப்பணியில் ஈடுபட்டிருப்போரிடம், துணிவு, கற்பனைத்திறன், தொலைநோக்குப்பார்வை ஆகியவை தேவை என்று எடுத்துரைத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "எழுந்து, அச்சமின்றி முன்னே செல்லுங்கள்" என்று, கருத்தரங்கின் மையப்பொருள் அமைந்ததைக் குறித்து தன் பாராட்டுக்களை வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.