2017-01-06 14:40:00

ஆயர்களின் முயற்சியால் காங்கோ அரசுத்தலைவர் பதவி விலக இசைவு


சன.06,2017. காங்கோ சனநாயகக் குடியரசில், கத்தோலிக்க ஆயர்களின் முயற்சியால், அந்நாட்டு அரசுத்தலைவர், பதவியிலிருந்து விலகுவதற்கு இசைவு தெரிவித்துள்ளார் என, ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

2001ம் ஆண்டிலிருந்து பதவியிலிருக்கும் அரசுத்தலைவர் ஜோசப் கபிலா அவர்கள், அரசியல் அமைப்பின்படி, அவரது பணிக்காலம் முடிந்தும், பதவியிலிருந்து விலகாமல் இருந்து வருகிறார்.

இதையடுத்து, நாடெங்கும் போராட்டங்கள் இடம்பெற்றுவரும்வேளை, அரசுத்தலைவர் கபிலா அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் இடையே, ஆயர்கள் உரையாடலை நடத்தியதையடுத்து, அரசுத்தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு இசைவு தெரிவித்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த உரையாடலின் பயனாக, அரசுத்தலைவர் கபிலா அவர்கள், வருகிற டிசம்பரில், தேர்தலை நடத்துவார் எனவும், அரசுத்தலைவர் பதவியை விட்டு, அவர் விலகுவார் எனவும், மீண்டும், வேட்பாளராக நிற்கமாட்டார் எனவும் தெரிய வந்துள்ளது.

காங்கோ சனநாயகக் குடியரசின் ஏறக்குறைய 8 கோடியே 13 இலட்சம் மக்களில், ஐம்பது விழுக்காட்டினர் கத்தோலிக்கர். முப்பது விழுக்காட்டினர் பிற கிறிஸ்தவ சபையினர், பத்து விழுக்காட்டினர் முஸ்லிம்கள் மற்றும் பத்து விழுக்காட்டினர், பூர்வீக மதங்களைப் பின்பற்றுகிறவர்கள்.

ஆதாரம் : CWN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.