2017-01-06 14:47:00

ஆலய மணிகளை ஒலித்து, புதிய லூனார் ஆண்டை ஆரம்பிக்க..


சன.06,2017. வியட்நாமில், இம்மாதம் 26ம் தேதி தொடங்கும் புதிய ஆண்டை, பட்டாசுகளுக்குப் பதிலாக, வழிபாட்டுத் தலங்களின் மணிகளை ஒலித்து, ஆரம்பிக்குமாறு, அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

புதிய ஆண்டுக் கொண்டாட்டங்களில், பட்டாசுகளுக்குச் செலவழிக்கப்படும் பணத்தைச் சேமித்து, அதை ஏழைகளுக்கு வழங்கும் நோக்கத்தில் இவ்வாறு அறிவித்துள்ளது, வியட்நாம் கம்யூனிச அரசு.

அரசின் இந்த அறிவிப்பு குறித்து, செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்த, அந்நாட்டு கலாச்சார மற்றும் விளையாட்டுத் துறைத் தலைவர், To Van Dong அவர்கள், பிறக்கவிருக்கும் புதிய லூனார் ஆண்டில், வழிபாட்டுத் தலங்களின் மணிகளை ஒலித்து, புதிய ஆண்டைத் தொடங்குமாறு, அனைத்து ஆலயங்கள், கோவில்கள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களைக் கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

விழாக்கள், வர்த்தக நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுவதையும், விழாக்களின்போது இடம்பெறும் மூடநம்பிக்கை பழக்கங்களையும், அரசு தடை செய்வதாகவும், Van Dong அவர்கள் அறிவித்தார்.

லூனார் புதிய ஆண்டு அல்லது Tet எனப்படும் புதிய ஆண்டுக் கொண்டாட்டங்கள், இம்மாதம் 26ம் தேதி முதல், பிப்ரவரி முதல் தேதி வரை, வியட்நாமில் இடம்பெறவுள்ளன. வியட்நாமில், மொத்தம் 7,966 விழாக்கள் சிறப்பிக்கப்படுகின்றன.

வியட்நாம், சீனா, திபெத்து, மங்கோலியா, கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில், லூனார் புதிய ஆண்டு சிறப்பிக்கப்படுகின்றது. சீனாவில், இம்மாதம் 27ம் தேதி முதல், பிப்ரவரி 2ம் தேதி வரை இப்புதிய ஆண்டுக் கொண்டாட்டங்கள் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.