2017-01-09 10:37:00

வாரம் ஓர் அலசல் – அன்புடையவரே வாழ்பவர்


சன.09,2017. நீர்இன்று அமையாது உலகு; எனில், யார்யார்க்கும், வான்இன்று அமையாது ஒழுக்கு". அதாவது, நீர் இல்லையென்றால் இவ்வுலகில் வாழ்வு கிடையாது. மழை இல்லையென்றால் ஒழுக்கமும் இருக்காது என்பது வள்ளுவர் வாக்கு. இந்தக் கூற்றை இக்காலத்தில் நாம், கண்கூடாகக் கண்டு வருகிறோம். நாகரிகத்திற்கு ஏற்ப மனிதன் மட்டும்தான் மாற வேண்டுமா... நாங்களும் ஏன் மாறக்கூடாது என கேட்பதுபோல, இயற்கையில் இந்நாள்களில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஐரோப்பா கண்டம் முழுவதும், கடுமையான குளிர் மற்றும் கடும் பனிப்பொழிவு. இதனால் பல உயிரிழப்புகள். இவ்வாறு உயிரிழந்தவர்களில் பலர் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் தெருக்களில் வாழ்பவர்கள். கடந்த வெள்ளிக்கிழமையன்று, இரஷ்யாவின் சில பகுதிகளில், கடந்த 120 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, குளிர் கடுமையாக, மைனஸ் முப்பது டிகிரி செல்ஷியஸாக இருந்தது. போலந்தில் இஞ்ஞாயிறன்று காலநிலை மைனஸ் 26. இத்தாலியில், தென் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் பெய்துவரும் கடும் பனிப்பொழிவு, இரண்டாம் உலகப் போருக்குப்பின் பெய்யும் கடுமையான பனிப்பொழிவு எனச் சொல்லப்படுகின்றது. வத்திக்கான் தூய பேதுரு வளாகத்திலுள்ள இரு நீர்ஊற்றுக்களின் தண்ணீர், பனிக்கட்டிகளாகத் தொங்குவதையும் காண முடிகின்றது. இந்நிலை ஐரோப்பாவில் மட்டுமல்ல, இந்தியாவில், ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேச மாநிலங்களிலும்தான்.  அங்கு, அதிக அளவு பனிப்பொழிவு காணப்படுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் தெற்கு பகுதியில், கடந்த ஒரு வாரமாகப் பெய்த கனமழையால், ஏறக்குறைய ஏழு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய ஆண்டு பிறந்து சில நாள்கள் கடந்துவிட்ட நிலையில், இயற்கையின் பேரழிவுகள், ஒவ்வோர் இடத்திலும், ஒவ்வொரு விதமாக, மக்களைக் கண்ணீரில் மூழ்கடித்து வைத்துள்ளன. 2016ம் ஆண்டில், மத்திய தரைக் கடல் வழியாக, ஐரோப்பாவுக்கு, குறிப்பாக, இத்தாலிக்கும், கிரேக்கத்திற்கும், குறைந்தது 3 இலட்சத்து, 63 ஆயிரத்து, 348 பேர் பிழைக்கப் புறப்பட்டனர். ஆனால், இவர்களில், 5,079 பேர் வழியிலே, கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என, ஐ.நா. சந்தேகிக்கிறது. தமிழகத்தில், பருவமழை பொய்த்துவிட்டதால் ஏற்பட்டுள்ள வறட்சியின் கொடுமையால், கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக, ஏறக்குறைய 125 விவசாயிகள் தற்கொலையாலும் அதிர்ச்சியாலும் இறந்துள்ளனர். மேலும், ஒடிசா மாநிலம், அங்குல் மாவட்டத்தில், ஒரு தந்தை, இறந்த தனது ஐந்து வயது சிறுமியை, மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு, பதினைந்து கி.மீ தூரம், தோளில் வைத்து தூக்கிச் சென்ற பரிதாபம் மீண்டும் ஒருமுறை நிகழ்ந்துள்ளது. மருத்துவமனை வாகனம் தர மறுத்ததே இதற்குக் காரணம். கடந்த வெள்ளிக்கிழமை இந்தச் சிறுமி இறந்துள்ளார். அன்பர்களே, இயற்கைப் பேரிடர்களாலும், மனிதர்களின் பேராசை நிரம்பிய, அறிவற்ற, அன்பற்ற கனத்த இதயங்களால் நடத்தப்படும் வன்முறைகளாலும், உயிரிழக்கும் மனிதர்களின் அழுகுரல்கள், நம் கண்களில்  கண்ணீரை வரவழைக்கின்றன.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர், இந்நாள்களில், கடும் பனிப்பொழிவால் துன்புறும் மக்களையும், இதில் இறந்தவர்களையும், குறிப்பாக, வீடுகளின்றி இருப்போரையும் நினைவுகூர்ந்து, அவர்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். இவ்வாறு கூறியதோடு, வீடின்றி தெருவில் வாழ்வோர், வத்திக்கானின் தங்குமிடங்களுக்குச் செல்ல 24 மணிநேரமும் அவ்விடங்கள் திறந்திருக்கவும், அங்குச் செல்வதற்கு விரும்பாதவர்கள், வாகனங்களில் தங்குவதற்கும், வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார் திருத்தந்தை.

மேலும், இஞ்ஞாயிறு காலையில், வத்திக்கானின் சிஸ்டீன் சிற்றாலயத்தில் 15 ஆண் மற்றும் 13 பெண் குழந்தைகளுக்கு, திருமுழுக்கு அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அப்போது அங்கே, குழந்தைகளின் அழுகை, ஒரு கச்சேரி போல் இருந்தது. அதைப் பார்த்த திருத்தந்தை, இயேசு நிகழ்த்திய முதல் மறையுரை, பெத்லகேம் மாட்டுத்தொழுவத்தில் இடம்பெற்ற அழுகையாகத்தான் இருந்திருக்கும், அழுகைதான் இயேசுவின் முதல் மறையுரை என்று நினைக்கின்றேன் என்று சொன்னார். இக்குழந்தைகள் ஏன் அழுகிறார்கள் என்பது அவர்களுக்கேத் தெரியாமல் இருக்கலாம். ஒருவேளை, இந்நாளைய நிகழ்வுக்காக, அவர்கள் விரைவிலே எழுப்பப்பட்டிருக்கலாம்,    அல்லது ஒரு குழந்தை இலேசாக முணுகத் தொடங்கியவுடன், அடுத்த குழந்தையும் அவ்வாறு செய்திருக்கலாம், இந்த இடம் புதிதாக இருக்கலாம் அல்லது பசியால் அழுதிருக்கலாம் என்று, அக்குழந்தைகள் அழுததற்கான காரணங்களைச் சொன்னார் திருத்தந்தை.

அப்பாவி மக்கள் பலர், அதிலும், எண்ணற்ற சிறார் பல்வேறு காரணங்களால் அழுது கண்ணீர் சிந்துகின்றனர். வாழ்வதற்கு வழியில்லை, உதவி செய்வதற்கு யாருமில்லை எனப் புலம்புகின்றனர். இவர்களின் புலம்பல்களை அரசியல் தலைவர்கள் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. அழுகை பற்றிய கவிதை ஒன்று இவ்வாறு சொல்கிறது. அழுது அழுதுதான் பெற்றார் தாய். அழுதுகொண்டுதான் பிறந்தான் மனிதன். தாயின் அழுகையின் அவலத்தை மாற்றிச் சிரித்திட முயன்றான் மனிதன். அதை வாழ்க்கை என்றான். அதைத் தொடரும் வேளையெல்லாம், இடைவேளையாய் வந்தது அழுகையே! மீண்டும் முயன்றான், மீண்டும் தொடர்ந்தான்! மீண்டும் சிரித்தான், மீண்டும் அழுதான்! முடிவில் வந்து நின்றது முடிவில்லாத ஒரு மௌனம். அந்த மௌனத்தின் பொருள் மகிழ்ச்சியா அழுகையா, யார் அறிவார்?

அழுகை - உடல் வலித்தாலும் வரும், உள்ளம் வலித்தாலும் வரும், பிரிவின் போதும் வரும், பிரிந்தவர்கள் சேரும்போதும் வரும், இதற்கு, ஆண் பெண் என்ற பேதமில்லை, எல்லாருக்கும் இது சமமானது. திரைக்காட்சியில் அழ வைப்பவரும் ஜெயிக்கிறார். சிரிக்க வைப்பவரும் ஜெயிக்கிறார். தொலைக்காட்சியில் பெரும்பாலும் அழ வைப்பவரே நடத்துகிறார் ஆட்சி...கதை மூலமும் கவிதை மூலமும் அழ வைப்பவர் மிகச் சிறந்த படைப்பாளியாகிறார்.. விலங்குகளுக்கும் கண்ணீர் வரும். மேகம் அழுதால் பூமியே சிரிக்கும்...சிரிப்போடுகூட வரும் அழுகை, மிக மேன்மையானது...அழுகைகூட அழகாகிறது, பாசத்தில் வெளிப்படும்போது... ஒருவருக்காய் ஊரே, உலகே அழும்போது, அவர் வானில் தலைவராய் மின்னுகிறார்...

நாம் இறக்கும்போது, ஊரே உண்மையாய் அழுதால், நாம் உண்மையிலேயே உன்னத, உயரிய வாழ்வை வாழ்ந்தோம் என்று அர்த்தம். நாம் வாழ்ந்த நாள்களில், பலரின் கண்ணீரைத் துடைத்தோம், பலர் வாழ்வில் விடியலைக் கொணர்ந்தோம் என்று அர்த்தம். இதற்கு, அப்துல் கலாம் ஐயா அவர்கள், ஓர் எடுத்துக்காட்டு. நம் கண்முன் ஒவ்வொரு நாளும் எத்தனையோ உள்ளங்கள், நம் இதமான கரங்களுக்காகக் காத்திருக்கின்றன. இதோ, சேலம், வேலையில்லாத பட்டதாரிகள் கடை, நமக்கு ஓர் உந்து சக்தியாக இருக்கின்றது. சேலம் இரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள, செரி சாலையின் மத்தியில் உள்ள ஒரு மாடிப்படியின்கீழ் சிறிய அளவில், வேலை இல்லாத பட்டதாரிகள் என்ற ஒரு கடை இருக்கிறது. 72 வயது நிரம்பிய இராமன், அந்தக் கடையின் முதலாளி. அங்கு, பள்ளிக்கூட பை, இடைக்கச்சை, பட்டாசு, செருப்பு போன்றவைகள் விற்பனையாகின்றன. இவற்றை விற்பது மட்டுமல்லாமல், இவற்றை வாங்குவோரிடமும், இவற்றைப் பராமரிப்பது பற்றிய குறிப்புகளையும் வழங்குகிறார் இராமன். அவர் சொல்கிறார்....

முப்பத்தைந்து ஆண்டுகளுக்குமுன், படித்து முடித்தவர்களுக்கு வேலை கிடைப்பது மிகவும் சிரமமான விடயமாக இருந்தது. அப்படியே கிடைத்தாலும் அது குறைந்த ஊதியமாகவே இருந்தது. இந்த நிலையில்தான், என்னுடன் கல்லுாரியில் படித்த நண்பர்களுடன் பேசி, நாமே சுயமாக ஏதாவது தொழில் செய்து சம்பாதிப்போம் என்று முடிவு செய்தோம். செய்யும் தொழிலில், வேலை இல்லாத பட்டதாரிகள் முழு நேரமாகவும், வேலை பார்த்து ஊதியம் போதாது என்று நினைப்பவர்கள், பகுதி நேரமாகவும் தொழில் பார்த்து, வரக்கூடிய வருமானத்தை பிரித்துக் கொள்வது என்று முடிவு செய்தோம். நாம் செய்யக்கூடிய தொழில் எதுவாக இருந்தாலும், அதன் தரம் பேசப்படவேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தோம். வேலை கிடைத்தவர்கள் வியாபாரத்திற்கு வராததாலும், விரவிருப்பம் இருந்தாலும், வேறு ஊருக்கு மாறுதலானதாலும், இங்கே தொழில் கற்றவர்கள், தனியாக தொழில் நடத்தச் சென்றதாலும், வேலை இல்லாத பட்டதாரிகள் கடையில், ஆட்கள் குறைந்து கொண்டே போய் இன்றைய தேதிக்கு, நான் மட்டுமே கடைசியாக இருக்கிறேன். நான் நல்ல நிலையில் இருக்கும்போதே நல்ல காரியம் செய்திட விரும்புவதால், என்னிடம் நீண்ட காலம் உதவியாளராக இருப்பவரிடம் இந்தக் கடையை ஒப்படைத்துவிட்டு ஒய்வு பெறப்போகிறேன் என்றார்.

பிறருக்கு உதவும், பிறரின் கண்ணீரைத் துடைக்கும் நல்ல அன்புள்ளங்கள், சமுதாயத்தில் ஆங்காங்கே மின்னுகின்றனர். அவர்களில் ஒருவராக நாமும் இருக்கலாமே. எவர் ஒருவருடைய நெஞ்சு ஏழை மக்களுக்காகத் துயரத்தில் அழுமோ, அவரையே நான் மகாத்மா என்பேன். இவ்வுலகில் பிறந்த நீங்கள், அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச்செல்லுங்கள். இல்லையேல் உங்களுக்கும் மரங்கள் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும். அன்புடையவனே வாழ்பவன். சுயநலமுடையவனோ செத்துக் கொண்டிருக்கின்றான் என்றே பொருள். இவ்வாறு சொன்னவர் சுவாமி விவேகானந்தர். இவரின் பிறந்த நாள் சனவரி 12, வருகிற வியாழன். துயருறும் மக்களின் கண்ணீரைத் துடைக்கும் அன்புடையவர்களாக வாழ்வோமா!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.