2017-01-10 17:01:00

உண்மையை அதிகாரத்தோடு போதித்தவர் இயேசு


சன.10,2017. மக்களுக்குப் பணிவிடை புரிந்ததன் வழியாக, அதிகாரத்தைக் கொண்டிருந்த  இயேசு, மக்களுக்கு நெருக்கமானவராகவும், முரண்பாடற்றவராகவும் இருந்தார் என்று, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இச்செவ்வாய் காலை நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இரு துருவங்களாக இருந்த, இயேசுவின் அதிகாரம் மற்றும், பரிசேயரின் அதிகாரம் பற்றி, மறையுரையில் விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறைநூல் அறிஞர்கள், குருத்துவ அதிகாரத்தோடு போதித்தனர், அவர்கள், மக்களுக்கு வெகு தொலைவில் இருந்தனர் மற்றும், அவர்கள், போதித்தபடி வாழவில்லை என்றும் கூறினார்.

மக்கள்மீது அதிகாரம் கொண்டிருந்த மறைநூல் அறிஞர் போலன்றி, அதிகாரம் கொண்டவராக இயேசு போதிப்பதைப் பார்த்து, மக்கள் திகைப்படைந்தது பற்றி, இந்நாளைய நற்செய்தி பேசுகின்றது என்றுரைத்த திருத்தந்தை, மறைநூல் அறிஞர்களின் போதனை மக்களின் இதயங்களில் நுழையவில்லை, அதேநேரம், இயேசு, உண்மையான அதிகாரம் கொண்டவராய், உண்மையை அதிகாரத்தோடு போதித்தார் என்றார்.

இயேசுவின் அதிகாரம், மறைநூல் அறிஞர்களின் அதிகாரத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றது என்பதை, இயேசுவின் அதிகாரத்தின் மூன்று பண்புகளால் விளக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு தாழ்மையோடு போதித்தார், அவர் மக்களுக்குப் பணிவிடை புரிந்தார், மக்கள் நன்றாகப் புரிந்துகொள்ளும் முறையில் காரியங்களை விளக்கினார், அவர் பணியாளரின் மனநிலையைக் கொண்டிருந்தார், அது அவருக்கு அதிகாரத்தைக் கொடுத்தது என்றார் திருத்தந்தை.

இயேசு, மக்களுக்கு நெருக்கமாக இருந்தார், அது அவருக்கு அதிகாரத்தை அளித்தது என்றும், இயேசுவின் போதனை, அவரின் உணர்வு, அவர் ஆற்றியது ஆகிய இவைகளுக்குள் ஒத்திசைவு இருந்தது என்றும், இயேசு போதித்ததை வாழ்ந்தார் என்றும், மறையுரையில் எடுத்துச்சொன்னார் திருத்தந்தை. 

இயேசுவின் இப்பண்புகளைப் புரிந்துகொள்வதற்கு நல்ல சமாரியர் உவமையை விளக்கி, தனது மறையுரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.