2017-01-10 15:57:00

ரோஹிஞ்ஜாயா மக்கள்மீது அக்கறை காட்ட,மலேசிய அரசுக்கு கோரிக்கை


சன.10,2017. மலேசியாவிலுள்ள பல்லாயிரக்கணக்கான ரோஹிஞ்ஜாயா (Rohingya) புலம்பெயர்ந்த மக்களின் நெருக்கடி நிலைகள் களையப்படுவதற்கு, மலேசிய அரசை விண்ணப்பித்துள்ளது, CCM என்ற மலேசிய கிறிஸ்தவ சபைகள் அவை.

பிற சமயத்தவர் மற்றும், பொதுநல அமைப்புகளின் தலைவர்களுடன் இணைந்து இவ்விண்ணப்பத்தை மலேசிய அரசுக்கு முன்வைத்துள்ள, CCM அவை, ரோஹிஞ்ஜாயா மக்களுக்காகப் பரிதாபப்படுவதை விடுத்து, அம்மக்களுக்கு, சட்டப்படி தங்குவதற்கு அனுமதி அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

நலிவுறும் இம்மக்களை, தடுப்பு முகாம்களில் துன்புறவிடாமல், அவர்களைப் பாதுகாப்பதற்குப் பொறுப்பேற்குமாறும் மலேசிய அரசை வலியுறுத்தியுள்ளது மலேசிய கிறிஸ்தவ சபைகள் அவை.

இதற்கிடையே, மியான்மாரிலிருந்து வெளியேறி பங்களாதேஷிற்குள் நுழையும் ரோஹிஞ்ஜாயா முஸ்லிம்களின் எண்ணிக்கை, கணிசமாக உயர்ந்து வருகிறது என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

கடந்த வாரம் மட்டும் ஏறக்குறைய 22 ஆயிரம் பேர் கிழக்கு பங்களாதேஷிற்குள் நுழைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூன்று மாதங்களுக்கு முன்பு நெருக்கடி நிலை தொடங்கியதிலிருந்து இதுவரை ஏறக்குறைய 65 ஆயிரம் பேர், எல்லையைத் தாண்டியுள்ளனர்.

மியான்மாரின் Rakhine மாநிலத்தில், மியான்மார் அரசின் பாகுபாடு நிறைந்த கொள்கைகளால், அம்மாநிலத்திலிருந்து, பல்லாயிரக்கணக்கான, ரோஹிஞ்ஜாயா முஸ்லிம் இன மக்கள், கடல் வழியாக, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் அடைக்கலம் தேடியுள்ளனர் எனவும், ஊடகச் செய்திகள் கூறுகின்றன. 

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.