2017-01-11 16:28:00

இடர் தடுப்பு, ஐ.நா.அவையின் தலையாயப் பணி - பொதுச் செயலர்


சன.11,2017. இடர்கள் எழுவதை தடுத்து நிறுத்துவதற்குப் பதில், இடர்கள் எழுந்ததும், அவற்றை தீர்ப்பதற்கு நாம் மிக அதிகமான நேரத்தையும், நிதியையும் பயன்படுத்துகிறோம் என்று, ஐ.நா. பொதுச் செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறினார்.

மோதல் தடுப்பும், அமைதியை நிலைநாட்டுதலும் என்ற தலைப்பில், ஐ.நா. பாதுகாப்பு அவை மேற்கொண்ட ஒரு விவாதத்தின்போது, கூட்டேரஸ் அவர்கள், இடர்களில் மக்கள் தரும் விலை மிக அதிக அளவில் உள்ளது என்று கூறினார்.

தான் ஐ.நா.பாதுகாப்பு அவையின் தலைவராகப் பணியாற்றிய வேளையில், இடர்களைத் தடுப்பது குறித்து அனைத்து அரசுத்தலைவர்களிடமும் அடிக்கடி பேசி வந்ததை எடுத்துரைத்த கூட்டேரஸ் அவர்கள், இடர் தடுப்பு என்பது, ஊடகங்களால் காட்ட முடியாத விறுவிறுப்பான ஒரு செயல்பாடு அல்ல என்பதால், அவை உலகின் கவனத்தை ஈர்க்காமல் சென்றன என்று குறிப்பிட்டார்.

இடர் தடுப்பு என்பது, இனி ஐ.நா. அவையின் தலையாயப் பணியாக அமையும் என்பதைச் சுட்டிக்காட்டிய கூட்டேரஸ் அவர்கள், ஐ.நா. அலுவலகங்களில், முடிவெடுக்கும் செயல்முறைகளில் தேவைப்படும் மாற்றங்களையும் தன் உரையில் விளக்கிக் கூறினார்.

ஐ.நா. பொது அவையில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளிடையே, ஒருவர் ஒருவரைப் பற்றிய நம்பிக்கை குறைந்துவருவதால், எடுக்கப்படும் முடிவுகளிலும் தயக்கங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன என்று ஐ.நா.வின் புதிய பொதுச்செயலர் கூட்டேரஸ் அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார். 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.