2017-01-12 16:09:00

இன்றைய நாள் திரும்ப வராது என்ற உணர்வில் வாழ அழைப்பு


சன.12,2017. ஒவ்வொரு நாளும் நமக்கு வழங்கும், தனித்துவமிக்க மற்றும் மீண்டும் திரும்பக் கிடைக்காத வாய்ப்புக்கள், விசுவாசத்திலும், கடவுளன்பிலும் நாம் வளருவதற்கு கிடைப்பவை என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை திருப்பலியில் கூறினார்.

இவ்வியாழன் காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியின் முதல் வாசகமான, எபிரேயருக்கு எழுதப்பட்ட பகுதியிலுள்ள, “இன்று, நீங்கள் அவரின் குரலைக் கேட்பீர்களென்றால், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள் (தி.பா.95,8)” என்ற திருப்பா வரிகளை மையப்படுத்தி, மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறினார்.

இன்று, இதயம் ஆகிய இரு சொற்களைக் கொண்டு மறையுரைச் சிந்தனைகளை வழங்கியத் திருத்தந்தை, நம் வாழ்வில், இன்று என்பது, ஒரே ஒருமுறை மட்டுமே உள்ளது, அதுவே எதார்த்தம், ஆனால், நாம், நாளைக்குச் செய்வேன் என்ற சோதனைக்கு உட்படுகின்றோம் என்று கூறினார். 

நம் இதயங்கள் ஆண்டவருக்குத் திறந்ததாய் இருக்க வேண்டுமெனவும் விசுவாசிகளிடம் கூறியத் திருத்தந்தை, விசுவாசமற்ற, கடினமான இதயங்களைக் கொண்டிருக்க வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.

இன்றைய நாள், திரும்ப வராது, நம் வாழ்வில் கதிரவன் மறைவு, இன்றைய நாளாகவும் இருக்கலாம், அல்லது பல நாள்கள் சென்றும் இடம்பெறலாம், எனவே, ஆண்டவரின் பிரசன்னத்தில், இன்றைய நாள் எப்படி இருந்தது? எனது இதயம் விசுவாசத்தில், உறுதியாக இருந்ததா? அது ஆண்டவரால் வழிநடத்தப்பட்டதா? போன்ற கேள்விகளை நம்மையே நாம் கேட்டுக்கொள்ள வேண்டுமென்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.