2017-01-12 16:22:00

இலங்கை நல்லிணக்க ஆலோசனை குழு பரிந்துரைக்கு வரவேற்பு


சன.12,2017. இலங்கையில் நீண்ட காலமாக இடம்பெற்ற உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் வழக்குகளை விசாரிப்பதற்கு, வெளிநாட்டு நீதிபதி ஒருவரையாவது நியமிக்க வேண்டுமென்ற ஒரு குழுவின் பரிந்துரையை வரவேற்றுள்ளார், திரிகோணமலை ஆயர் நோயெல் இம்மானுவேல்.

இலங்கையில் நல்லிணக்க வழிமுறைகள் குறித்த ஆலோசனைக்கு அரசால் நியமிக்கப்பட்ட குழு, இம்மாதம் 3ம் தேதி, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மங்கள சாமவீரா அவர்களிடம் சமர்ப்பித்த அறிக்கையில், மனித உரிமை மீறல் வழக்குகளை விசாரிப்பதற்கு, குறைந்தது ஒரு வெளிநாட்டு நீதிபதியையாவது நியமிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து, கருத்து தெரிவித்த ஆயர் இம்மானுவேல் அவர்கள், வெளிநாட்டு நீதிபதிகளின் இருப்பு, சரியானது என்றும், இலங்கையில், போர்க்காலக் குற்றங்களுக்குச் சாட்சி சொல்பவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

விசாரணையின்போது, இலங்கை நீதிபதிகள் இருந்தால், உள்ளூர் அதிகாரிகள், அவர்களை வசப்படுத்தி, தங்களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்றால்போல், அறிக்கைகளை எழுத வைப்பார்கள் எனவும், ஆயர் இம்மானுவேல் அவர்கள், கூறியுள்ளார்

மேலும், உலகத் தமிழர் பேரவையும், நல்லிணக்க வழிமுறைகள் ஆலோசனை குழுவின் விரிவான அறிக்கையை வரவேற்றுள்ளதோடு, அவ்வறிக்கையின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.