2017-01-12 16:14:00

யாருடைய துணையுமின்றி புலம்பெயரும் இளையோருக்கு உதவிக்கரம்


சன.12,2017. “புலம்பெயர்ந்த இளையோர், குறிப்பாக, யாருடைய துணையுமின்றி புலம்பெயரும் இளையோர், பாதுகாப்பற்றவர்கள்.  இவர்களுக்கு, ஒவ்வொருவரும், உதவிக்கரம் நீட்டுவார்களாக”என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இவ்வியாழனன்று வெளியாயின.

சனவரி 15, வருகிற ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும், 103வது உலக புலம்பெயர்ந்தவர் நாளையொட்டி, இவ்வியாழன் முதல், வருகிற ஞாயிறு வரை, திருத்தந்தை வெளியிடும் டுவிட்டர் செய்திகள், புலம்பெயர்ந்தவர் மற்றும், குடிபெயர்ந்தவர் பற்றியே அமைந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்தாலியின் லாட்சியோ மாநிலத்த் தலைவர் நிக்கோலா சிங்கரெத்தி, உரோம் மேயர் விர்ஜீனியா ராஜ்ஜி, எல்லைகளற்ற மருத்துவ அமைப்பின் துணை நிறுவனரும், "Samusocial International" உலகளாவிய சமூகநல அமைப்பின் தலைவருமாகிய டாக்டர் சேவியர் எம்மானுவேலி உட்பட, சிலரை, இவ்வியாழன் காலையில், திருப்பீடத்தில் தனியே சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்னும், பாலஸ்தீனத் தலைவர் Mahmoud Abbas அவர்களை, வருகிற சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்திக்கவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பாலஸ்தீனாவைச் சேர்ந்தவர்கள், முதல்முறையாக, புனிதர்களாக உயர்த்தப்பட்டது மற்றும், பாலஸ்தீனாவுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், முழுமையாக அமலுக்கு வந்தது ஆகிய இரு நிகழ்வுகளை முன்னிட்டு, இச்சந்திப்பு இடம்பெறவிருப்பதாக, திருப்பீடம் அறிவித்துள்ளது.

பாலஸ்தீனாவைச் சேர்ந்த அருள்சகோதரிகள் Mother Marie Alphonsine, Mariam Baouardy ஆகிய இருவரையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2015ம் ஆண்டு, மே 17ம் தேதி, வத்திக்கானில் புனிதர்களாக உயர்த்தினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.