2017-01-13 16:43:00

2017ல் உலகில் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும், ஐ.நா.


சன.13,2017. உலகில் நிலவும் நிச்சயமற்ற பொருளாதாரம், வளர்ந்துவரும் சமத்துவமின்மை ஆகியவைகளுக்கு மத்தியில், உலகில் வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்து வருகின்றது என, ILO என்ற உலக தொழில் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை கூறுகின்றது.

2017ம் ஆண்டில் உலக அளவில் வேலைவாய்ப்பு மற்றும் சமூகநிலை குறித்த ஆய்வறிக்கையை, இவ்வியாழனன்று வெளியிட்ட ILO நிறுவனம், 2017ம் ஆண்டில், உலகளவில், வேலைவாய்ப்பற்றவர்களின் எண்ணிக்கை 34 இலட்சமாக உயரும் என்று கூறியுள்ளது.

இதில், உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் ஏற்படும் ஏற்ற, இறக்கம் என அனைத்தும், ஆய்வு செய்யப்பட்டு, அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.

2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும் எனவும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும் தேக்கம் ஏற்படும் எனவும், அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, 2017 ம் ஆண்டில் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை, கடந்த ஆண்டு இருந்த, ஒரு கோடியே 77 இலட்சத்திலிருந்து, ஒரு கோடியே 78 இலட்சமாக அதிகரிக்கும். 2018ம் ஆண்டில் இது ஒரு கோடியே 80 இலட்சமாக உயரும். 2016ம் ஆண்டில் இந்தியாவில் வேலைவாய்ப்பு உருவாக்கம் பாராட்டும்படி இருந்தது. தெற்காசிய நாடுகளில் அதிகபட்சமாக இந்தியாவில் ஒரு கோடியே 34 இலட்சம் புதிய வேலைவாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.