2017-01-14 16:09:00

கர்தினால் Agustoni இறப்புக்கு திருத்தந்தை இரங்கல்


சன.14,2017. கத்தோலிக்கத் திருஅவையின் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைவர் கர்தினால் Gilberto Agustoni அவர்கள், உயிரிழந்ததை முன்னிட்டு, தனது இரங்கலைத் தெரிவிக்கும் தந்திச் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சுவிட்சர்லாந்திலுள்ள கர்தினால் Gilberto Agustoni அவர்களின் உறவினர் Luisa Santandrea அவர்களுக்கு, அனுதாபத் தந்தியை அனுப்பியுள்ள திருத்தந்தை, கர்தினால் Agustoni அவர்கள், பிரமாணிக்கமுள்ள அருள்பணியாளராக, திருஅவைக்கு, குறிப்பாக, Apostolic Signatura உச்ச நீதிமன்றத்திற்கு, அவர் ஆற்றியுள்ள பணிகளை, நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.

கத்தோலிக்கத் திருஅவையில், நீதி சார்ந்த விவகாரங்களில், மிக உயரிய அதிகாரத்தைக் கொண்டிருக்கும் Apostolic Signatura என்ற, உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைவராகிய கர்தினால் Agustoni அவர்கள், சுவிட்சர்லாந்து நாட்டில், 1922ம் ஆண்டில் பிறந்தவர்.

1946ம் ஆண்டில் அருள்பணியாளராக, திருப்பொழிவு செய்யப்பட்ட இவர், திருப்பீடத்தில் பல துறைகளில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார். 1994ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி, Apostolic Signaturaவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டில் இவர், கர்தினாலாகவும் உயர்த்தப்பட்டார். கர்தினால் Agustoni அவர்கள், சனவரி 13, இவ்வெள்ளியன்று இறைவனடி சேர்ந்தார். இவரின் அடக்கச்சடங்கு, சனவரி 17, வருகிற செவ்வாயன்று இடம்பெறும்.

கர்தினால் Gilberto Agustoni அவர்களின் இறப்போடு, திருஅவையில் மொத்தக் கர்தினால்களின் எண்ணிக்கை 226 ஆகவும், இவர்களில், திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய எண்பது வயதுக்குட்பட்டவர்கள், 120ஆகவும் உள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.