2017-01-14 16:00:00

சிரியா மீதான பொருளாதாரத் தடைகள் அகற்றப்பட வேண்டும்


சன.14,2017. மேற்குலகும், ஐக்கிய நாடுகள் நிறுவனமும், சிரியா மீது விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகள், உடனடியாக அகற்றப்பட வேண்டும் மற்றும், புரட்சியாளர்களுக்கு வழங்கும் ஆதரவுகளும், நிறுத்தப்பட வேண்டுமென, சிரியா கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிரியாவில் பல ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் போரை நிறுத்துவதற்கு இதுவே ஒரே வழி என்று, சிரியா தலத்திருஅவைத் தலைவர், முதுபெரும் தந்தை Ignatius Ephrem Joseph III Younan அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய பின்னர், இப்பேட்டியை அளித்த முதுபெரும் தந்தை Younan அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செபங்களுக்கும் நன்றி கூறினார்.

சிரியாவில், ஆயர்கள் உட்பட பல கிறிஸ்தவர்கள் கடத்தப்பட்டுள்ளது குறித்த கவலையையும் தெரிவித்த, முதுபெரும் தந்தை Younan அவர்கள், சிரியாவில் தொடர்ந்து இடம்பெறும் சண்டையில், ஏறக்குறைய ஆறு இலட்சம் கிறிஸ்தவர்கள் வெளியேறியுள்ளனர் எனவும், ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர் எனவும் கூறினார்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.