2017-01-16 16:37:00

உரோம் பங்குதளத்தில் நோயாளரை சந்தித்த திருத்தந்தை


சன.,16,2017. இஞ்ஞாயிறு மாலை உள்ளூர் நேரம் 3.40 மணியளவில் உரோம் நகரின் குய்தோனியா பகுதியிலுள்ள செத்தேவில்லே புனித மரியா பங்குதளம் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்பங்கில் 2 ஆண்டுகளுக்கு மேலாக கடும் நோயினால் துன்புறும் உதவிப் பங்குதந்தை ஜோசப் பெர்னார்டின் அவர்களை, முதலில், சந்தித்து உரையாடினார்.

பேச இயலாமல் படுக்கையிலேயே இருக்கும் 50 வயது நிரம்பிய இந்த அருள்பணியாளரை, ஆறுதல் தரும் வார்த்தைகளால் தேற்றினார், திருத்தந்தை.

பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்பங்கில் பல்வேறு மேய்ப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளோர் உட்பட,  வயதான, மற்றும், நோயாளர், சிறார், என 30 பேரைச் சந்தித்தார்.

திருப்பூட்டறையில், ஓர் இளம்தம்பதியர் உட்பட, 4 பேருக்கு ஒப்புரவு அருள் அடையாளத்தையும் நிறைவேற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்பங்கின், சிறார் நோயாளர் உட்பட, பல்வேறு தரப்பினருடன் ஏறக்குறைய இரண்டு மணி நேரம் செலவிட்ட பின்னர், திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நோயுற்றோர் தொடங்கி, ஒவ்வொரு தரப்பினருக்குமென தனது செய்தியை மறையுரையில் பகிர்ந்து கொண்டார்.

இயேசு, தம் பாடுகள் மற்றும், துன்பங்களோடு, நோயுற்றோருடனும், பிரச்சனைகளோடு இருப்பவர்களுடனும், மிக அருகில் இருப்பதற்கு விரும்பினார் என்றும், நாம் துன்புறும்போதும், பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போதும், இதனைப் புரிந்துகொள்வது கடினம் என்றும் கூறியத் திருத்தந்தை, இயேசுவின் இந்த அக்கறையை உணர்ந்துகொள்வதற்கு, தனது ஆசீரை வழங்குவதாக, நோயுற்றோரிடம் தெரிவித்தார்.

சிறார் மற்றும் இளையோருக்கென செய்தி வழங்கியபோது, சிறார் தன்னிடம் வழங்கிய ஓவியங்களுக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை, இளையோரை விசுவாசத்தில் உறுதிப்படுத்தினார்.

மேலும், கடந்த ஆண்டில், திருமுழுக்குப் பெற்ற குழந்தைகளின் பெற்றோருக்குக் கூறிய செய்தியில், பெற்றோர், பிள்ளைகளுக்கு முன்னால் சண்டை போடக்கூடாது மற்றும், படுக்கைக்குச் செல்வதற்குமுன், பெற்றோர் தங்களுக்குள் சமாதானம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.

மேலும், பங்கு மக்களிடம் பொதுவாகப் பேசியத் திருத்தந்தை, புறணி பேசுதலையும், ஒருவரையொருவர் மோசமாகப் பேசுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.