2017-01-16 16:53:00

துணையின்றி குடிபெயரும் சிறார் ஆபத்தில் உள்ளனர்


சன.,16,2017. இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட உலக குடியேற்றதாரர் தினம் குறித்து தன் மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடிபெயர்வோருள், துணையின்றி குடிபெயரும் சிறார்கள் குறித்த தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார்.

நம் சகோதரர்களாகிய சிறார் குடியேற்றதார்கள், துணையின்றி குடிபெயரும்போது அவர்களின் வாழ்வு ஆபத்து நிறைந்ததாக உள்ளது என்ற கவலையை தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறார் குடியேற்றதாரர்களின் பாதுகாப்பிற்கும், அவர்களை நாட்டிற்குள் ஒன்றிணைப்பதற்கும் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என விண்ணப்பித்தார்.

தூய பேதுரு வளாகத்தில், மூவேளை செப உரைக்கு செவிமடுக்க கூடியிருந்த பல்வேறு நாடுகளின் குடியேற்றதாரர்களை நோக்கி விண்ணப்பம் ஒன்றை விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடிபுகுந்திருக்கும் நாடுகளின் சட்டங்களையும் பாரம்பரியங்களையும் மதித்து வாழும் அதேவேளையில், அவரவர்களின் கலாச்சார தனித்தன்மையையும் காப்பாற்றி வாழுமாறு கேட்டுக்கொண்டார்.

வேறுபட்ட கலாச்சாரங்கள் ஒன்றையொன்று சந்திப்பது என்பது, ஒருவருக்கொருவர் உதவுவதாகும் எனவும் உரைத்த திருத்தந்தை, குடியேற்றதாரரிடையே பணிபுரியும் அனைவருக்கும் தன் ஊக்கத்தையும் வழங்கினார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.