2017-01-17 15:03:00

நம்பிக்கையில் வேரூன்றிய துணிச்சல்மிகு கிறிஸ்தவர்கள் நாம்


சன.17,2017. நம்பிக்கையில் வேரூன்றியவர்களாக, எந்த இருளான நேரங்களிலும் நிலைத்து நிற்கும், துணிச்சல்மிகு கிறிஸ்தவர்களாக இருங்கள் என இச்செவ்வாய்க்கிழமை காலை திருப்பலியில் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொருவரும் நம்பிக்கையில் வேரூன்றிய, துணிச்சல்மிகு கிறிஸ்தவர்களாக இருக்கும்படியும், சோம்பேறித்தன கிறிஸ்தவர்கள் என்பவர்கள், தேங்கிய நிலையினை ஒத்தவர்கள், அவர்களைப் பொறுத்தவரையில் திருஅவை என்பது, ஓர் அழகான வண்டி நிறுத்துமிடம் மட்டுமே எனவும் கூறினார்.

முன்னோக்கிச் செல்வதற்கான எந்தவித ஆர்வமும் இல்லாமல், மாற்றங்களைக் கொணர எதையும் ஆற்றாமல் இருக்கும் சோம்பேறிக் கிறிஸ்தவர்கள், ஒரே இடத்தில் தேங்கி அழுக்காகும் தண்ணீரைப் போன்றவர்கள் என்றார் திருத்தந்தை.

நம்பிக்கையைக் கையில் கொண்டு, துன்பகரமான வேளைகளிலும் நிலைத்து நிற்கும் துணிச்சல்மிகு கிறிஸ்தவர்கள் குறித்தும், எப்போதும் ஓய்விலேயே இருக்கும் சோம்பேறிக் கிறிஸ்தவர்கள் குறித்தும், ஒப்புமைகளை அடுக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவர்களின், வாழ்வு நங்கூரம் என்பது, நம்பிக்கையே எனவும் கூறினார்.

மாற்றங்களை முன்னோக்கி எடுத்துச் செல்லாத சோம்பேறிக் கிறிஸ்தவர்கள் சுயநலமிக்கவர்கள் என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.