2017-01-18 15:55:00

2016ல் நான்கு நாட்களுக்கு ஒரு பத்திரிகையாளர் கொல்லப்பட்டார்


சன.18,2017. 2016ம் ஆண்டு, நான்கு நாட்களுக்கு ஒரு முறை, பத்திரிகையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டார் என்று, ஐ.நா. ஆய்வறிக்கையொன்று கூறுகிறது.

யுனெஸ்கோ நிறுவனம் இச்செவ்வாயன்று வெளியிட்ட இந்த அறிக்கையின்படி, 2016ம் ஆண்டு, 101 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இது, நான்கு நாட்களுக்கு ஒரு பத்திரிகையாளர் கொல்லப்படுதல் என்பதற்குச் சமம் என்றும், இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

பத்திரிகையாளர்களின் வாழ்வு ஆபத்தானது என்றும், கடந்த ஆண்டில், பத்திரிகையாளர் என்ற அடையாள அட்டையை வைத்திருந்தோர் கூடுதலான தாக்குதல்களுக்கு உள்ளாயினர் என்றும், யுனெஸ்கோ உதவி இயக்குனர், Frank La Rue அவர்கள் கூறியுள்ளார்.

2016ம் ஆண்டு சிரியா, ஈராக், ஏமன் நாடுகளில் அதிக அளவும், அதற்கு அடுத்தபடியாக, இலத்தீன் அமேரிக்கா மற்றும் கரிபியன் தீவுகள் பகுதிகளில் அதிக அளவும் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர் என்று இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

நடைபெற்ற கொலைகளுக்குக் காரணமானவர்கள், எவ்வித தண்டனையும் பெறாமல் போனது, கூடுதல் துணிச்சலைத் தந்துள்ளது என்றும், பத்திரிகையாளர்களின் வாழ்வு, சமூக வலைத்தளங்கள் வழியே ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருகின்றது என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.