2017-01-18 16:11:00

உலகின் அனைத்து நாடுகளிலும் பாத்திமா அன்னையின் திரு உருவம்


சன.18,2017. புனித பாத்திமா அன்னையின் நூற்றாண்டு விழா நெருங்கிவருவதையொட்டி, அன்னையின் திரு உருவம் உலகெங்கும் எடுத்துச் செல்லப்படுவதன் ஒரு பகுதியாக, சனவரி 16, இத்திங்களன்று இத்திரு உருவம், ஹாங்காங், புனித தெரேசா ஆலயத்தில் மக்கள் வணக்கத்திற்கென வைக்கப்பட்டது.

இவ்வாண்டு மே மாதம், புனித பாத்திமா அன்னையின் நூற்றாண்டு விழா சிறப்பிக்கப்பட விருப்பதையொட்டி, உலகின் அனைத்து நாடுகளிலும் அன்னையின் திரு உருவம் எடுத்துச் செல்லப்படுவதற்கு உதவியாக, சனவரி 11, கடந்த புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாத்திமா அன்னையின் 6 திரு உருவங்களை ஆசீர்வதித்து, உலகெங்கும் அனுப்பிவைத்தார்.

அன்னையின் திரு உருவம், ஆசியாவில் மேற்கொள்ளும் பயணத்தின் முதல் கட்டமாக, ஹாங்காங் புனித தெரேசா ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் வணக்கத்தைப் பெற்றது.

சனவரி இறுதியில், பாத்திமா அன்னையின் திரு உருவம், பிலிப்பீன்ஸ் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்படும் என்று, UCAN செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

1917ம் ஆண்டு, போர்த்துக்கல் நாட்டின் மூன்று இடையர்களுக்கு மரியன்னை காட்சியளித்ததன் நூறாம் ஆண்டு சிறப்பிக்கப்படுவதையடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு மே மாதம் பாத்திமா திருத்தலத்திற்குச் செல்லவிருக்கிறார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.