2017-01-18 16:05:00

பாகுபாடுகளைக் களைய, ஐ.நா. பொதுச் செயலர் அழைப்பு


சன.18,2017. பாகுபாடு காட்டுவதால், எந்த ஒரு சமுதாயமும் தன் முழுமையான வளர்ச்சியைப் பெற இயலாது என்று ஐ.நா. பொதுச் செயலர், அந்தோனியோ குட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

கனடா, அமெரிக்க ஐக்கிய நாடு, ஆகிய இரு அரசுகளின் உயர் மட்டக் குழுக்களும், ஐ.நா. அவையும் இணைந்து நடத்திய ஒரு கூட்டத்திற்கு, குட்டேரஸ் அவர்கள் அனுப்பியிருந்த ஒரு காணொளிச் செய்தியில், பன்முகத்தன்மை, மனித சமுதாயத்தின் செல்வம் என்றும், அது ஒருபோதும் ஆபத்தல்ல என்றும், குறிப்பிட்டார்.

எந்த ஒரு சமுதாயமும் நெருக்கடியான நிலைகளைச் சந்திக்கும்போது, தங்கள் சமுதாயத்தின் சிறுபான்மையினரை அதற்குக் காரணம் காட்டி, அவர்களை புறக்கணிப்பது உலகெங்கும் பரவி வரும் ஒரு தவறு என்று குட்டேரஸ் அவர்கள் தன் செய்தியில் சுட்டிக்காட்டினார்.

பாகுபாடுகளைக் களைந்து, மனித உரிமைகளை வளர்க்கவும், பாலங்களை அமைக்கவும், அச்சத்திற்குப் பதில் நம்பிக்கையை உருவாக்கவும் நாம் இணைந்து வருவோம் என்று, ஐ.நா. பொதுச் செயலரின் காணொளிச் செய்தி நிறைவடைகிறது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.