2017-01-18 15:54:00

மார்ட்டின் லூத்தர், திருஅவையில் பிளவை உருவாக்க நினைக்கவில்லை


சன.18,2017. ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன், மார்ட்டின் லூத்தர் அவர்கள் கத்தோலிக்கத் திருஅவையில் சீர்திருத்தங்களை உருவாக்க நினைத்தாரே தவிர, பிளவை உருவாக்க நினைக்கவில்லை என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

சனவரி 18, இப்புதன் முதல், 25, வருகிற புதன் முடிய கத்தோலிக்க உலகெங்கும் சிறப்பிக்கப்படும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தையொட்டி, கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் கர்ட் கோக் அவர்கள், வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவில் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் இவ்வாறு கூறியுள்ளார்.

1517ம் ஆண்டு, கத்தோலிக்கத் திருஅவையில் நிலவி வந்த சில நடைமுறைப் பழக்கங்களை கேள்விக்குள்ளாக்கி, அவற்றில் சீர்திருத்தங்களை கொணர லூத்தர் அவர்கள் முயன்ற வேளையில், அப்போது நிலவிய அரசியல் சூழல், திருஅவையில் பிளவை உருவாக்கியது என்று, கர்தினால் கோக் அவர்கள், தன் கட்டுரையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

பல நூற்றாண்டுகளாக கத்தோலிக்கத் திருஅவைக்கும், சீர்திருத்த சபைக்கும் இடையே நிலவி வந்த மோதல் உணர்வுகள், 2ம் வத்திக்கான் சங்கத்தின்போது குறைக்கப்பட்டு, இவ்விரு சபைகளும் இணைந்து வரும் ஒப்புரவு முயற்சிகள் பலனளித்தன என்று கர்தினால் கோக் அவர்கள் இக்கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு நூற்றாண்டு என்றழைக்கப்படும் 20, 21ம் நூற்றாண்டுகளில், சீர்திருத்த இயக்கத்தின் 500ம் ஆண்டு சிறப்பிக்கப்படுவது பொருளுள்ளது என்று, கர்தினால் கோக் அவர்கள் தன் கட்டுரையில் சிறப்பாக குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.