2017-01-19 15:44:00

"ஒளியின் செபங்கள்:குடியேற்றதாரர்களுக்கு செபிக்க ஓர் அழைப்பு"


சன.19,2017. அமெரிக்க அரசுத்தலைவராக டொனால்டு டிரம்ப் அவர்கள் பொறுப்பேற்கும் வேளையில், தங்கள் எதிர்காலம் குறித்து அச்சம் கொண்டுள்ள குடியேற்றதாரர்களுக்கென செபிக்க, அமெரிக்க ஐக்கிய நாட்டில் இயேசு சபையினர் பணியாற்றும் அனைத்து பங்குத் தளங்கள், பள்ளிகள் ஆகியவை முடிவெடுத்துள்ளன என்று CNS கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

சனவரி 20, இவ்வெள்ளியன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டின் 45வது அரசுத்தலைவராக டிரம்ப் அவர்கள் பொறுப்பேற்பதையொட்டி, சனவரி 19 இவ்வியாழன், அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகருக்கும், கிழக்கில் உள்ள நியூ ஜெர்சி நகருக்கும் இடைப்பட்ட அனைத்து நகரங்களிலும், குடியேற்றதாரர்களை மையப்படுத்திய செப முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"ஒளியின் செபங்கள்: குடியேற்றதாரர்களுக்கு செபிக்க ஓர் அழைப்பு" என்ற பெயரில், திருவிழிப்பு வழிபாடுகள், சிலுவைப்பாதைகள் ஆகிய பக்தி முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று Ignatian Solidarity Network என்ற இயேசு சபை அமைப்பு கூறியுள்ளது.

"ஒளியின் செபங்கள்" என்ற இந்த முயற்சி வழியே, குடியேற்றத்தாரருக்கு எதிராக துவக்கப்படும் அனைத்து முயற்சிகளையும் தடுத்து நிறுத்த, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் விண்ணப்பங்கள் அனுப்பப்படும் என்று இவ்வமைப்பினர் கூறியுள்ளனர்.

குடியேற்றதாரர்களுக்கு எதிராக செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டால், இயேசு சபையினரின் பங்குத் தளங்களும், பள்ளிகளும், புகலிடம் தரும் மையங்களாக அறிவிக்கப்படும் என்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டில் பணியாற்றும் இயேசு சபையினர் கூறியுள்ளனர்.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.