2017-01-19 16:04:00

புனித பூமியில் இஸ்ரேல் அரசின் ஆக்ரமிப்பு பெரும் அநீதியானது


சன.19,2017. இஸ்ரேல் அரசு, பாலஸ்தீன நாட்டின் ஒரு சில பகுதிகளை கடந்த 50 ஆண்டளவாய் ஆக்ரமித்திருப்பது, இஸ்ரேல், பாலஸ்தீன மக்களின் மனித உரிமைக்கும் மாண்புக்கும் எதிரானது என்று, புனித பூமியில் தங்கள் திருப்பயணத்தை நிறைவு செய்த ஆயர்கள் குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

'புனித பூமி ஒருங்கிணைப்பு' என்ற பெயரில், புனித பூமியில் ஒவ்வோர் ஆண்டும் திருப்பயணம் மேற்கொண்டு வரும் பன்னாட்டு ஆயர்கள் குழுவொன்று, அண்மையில் தங்கள் பயணத்தை நிறைவு செய்த வேளையில், பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் அரசு ஆக்ரமித்திருப்பது பெரும் அநீதி என்று கூறியுள்ளது.

இந்த அநீதி 50 ஆண்டுகளாக நீடித்து வருவதால், இதன் தாக்கத்தை உணராமல் போகும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன என்று 'புனித பூமி ஒருங்கிணைப்பு' குழுவின் தலைவர், ஆயர் Declan Lang அவர்கள் கூறியுள்ளார்.

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் கிறிஸ்தவர்களுடன் தங்கள் ஒன்றிப்பை வழங்குவது, இத்திருப்பயணத்தின் முக்கிய நோக்கம் என்று கூறிய ஆயர் Lang அவர்கள், இஸ்ரேல் அரசின் ஆக்கிரமிப்பை அகற்றுவது ஒன்றே இம்மக்களுக்கு அனைத்துலக சமுதாயம் செய்யக்கூடிய முக்கிய உதவி என்று எடுத்துரைத்தார்.

அண்மையில் பாலஸ்தீன நாட்டின் தூதரகம் வத்திக்கானில் நிறுவப்பட்டது, அந்நாட்டு மக்களுக்கு மிகுந்த ஆறுதலையும், உந்து சக்தியையும் வழங்கியுள்ளது என்று கூறிய ஆயர் Lang அவர்கள், தங்கள் பக்கம் நியாயம் உள்ளது என்பதை பாலஸ்தீனிய மக்கள் மேலும் உணர்வதற்கு, இது சிறந்ததொரு தருணம் என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.