2017-01-19 16:04:00

யூபிலி கண்காட்சி பொறுப்பாளர்களைச் சந்தித்தத் திருத்தந்தை


சன.19,2017. உரோம் நகரில் கொண்டாடப்பட்ட யூபிலி நினைவுகளில், பல வரலாற்றுப் பதிவுகள் காணப்பட்டாலும், அவை அனைத்திலும், மனிதரின் இயலாமையை, இறைவனின் நன்மைத்தனம் சந்தித்தது என்பது, முக்கியமான ஓர் உண்மையாக இருந்துள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த ஒரு சிறப்புக் குழுவினரிடம் கூறினார்.

கடந்த ஆண்டு சிறப்பிக்கப்பட்ட இரக்கத்தின் யூபிலியையொட்டி, இத்தாலிய அரசின் செனட் அவை, Antiquorum Habet என்ற பெயரில், 2016ம் ஆண்டு மார்ச் மாதம் முதல், ஜூலை மாதம் முடிய உரோம் நகரில் ஒரு கண்காட்சியை நிறுவியிருந்தது. இந்த கண்காட்சிக்கு பொறுப்பாய் இருந்தவர்களை, இவ்வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடத்தில் சந்தித்து, உரையாற்றினார்.

Antiquorum Habet என்ற பெயரில் திருத்தந்தை 8ம் போனிபஸ் அவர்கள் வெளியிட்ட மடல், யூபிலி ஆண்டுகளை அறிமுகப்படுத்தியதை தன் உரையில் குறிப்பிட்டத் திருத்தந்தை, உரோம் நகரில் கொண்டாடப்பட்ட ஒவ்வொரு யூபிலியும், இந்நகரின் கட்டடக் கலைக்கு மட்டும் சான்று பகரவில்லை, மாறாக, உரோம் நகருக்கு வருகை தந்த திருப்பயணிகளைப் பேணுவதிலும் சான்றுகள் பகர்ந்துள்ளன என்று கூறினார்.

இந்த கண்காட்சிக்கென உழைத்த அனைவரையும், அவர்களின் குடும்பத்தினரையும் இறைவன் தன் இரக்கத்தால் நிறைத்து, கடந்து சென்ற யூபிலியின் அனைத்து ஆன்மீக நலன்களையும் அவர்களுக்கு வழங்க, தான் செபிப்பதாகக் கூறினார், திருத்தந்தை.

உரோம் நகரின் Palazzo Giustiniani என்ற இடத்தில் உருவாக்கப்பட்டிருந்த Antiquorum Habet என்ற கண்காட்சியில், உரோம் நகரின் வரலாறு, திருஅவையின் யூபிலி வரலாறு இவற்றை விளக்கும் 600க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த புகைப்படங்கள், திருத்தந்தையர் வழங்கிய மடல்கள் ஆகியவை, கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.