2017-01-20 15:21:00

இலங்கை - 2017, புனித ஜோசப் வாஸ் ஆண்டு


சன.20,2017. இலங்கையில், புனிதராக முதல்முறையாக உயர்த்தப்பட்ட புனித ஜோசப் வாஸ் அவர்களின் ஆண்டாக, 2017ம் ஆண்டை அறிவித்துள்ளனர், இலங்கை ஆயர்கள்.

புனித ஜோசப் வாஸ் ஆண்டு குறித்து, செய்தியாளர்கள் கூட்டத்தில் விவரித்த, கொழும்பு பேராயர், கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், புனித ஜோசப் வாஸ் அவர்கள், இலங்கை கத்தோலிக்கருக்கும், உலகுக்கும் ஆற்றிய துணிச்சலான பணிகள் பற்றி, இந்த ஆண்டு முழுவதும், மிகத் தெளிவாக எடுத்துரைக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.

வறுமை ஒழிப்பு, பல்வேறு இனங்கள் மற்றும், மதங்கள் மத்தியில் நல்லிணக்கம் ஆகியவற்றுக்காக, இலங்கைத் தலத்திருஅவை, இவ்வாண்டில் சிறப்பாகப் பணியாற்ற விரும்புவதாகவும், இப்பண்புகள், புனித ஜோசப் வாஸ் அவர்களிடம் சிறந்து விளங்கியவை எனவும், கர்தினால் இரஞ்சித் அவர்கள் அறிவித்தார்.

இலங்கையில், 1505ம் ஆண்டில், போர்த்துக்கீசியர்கள் கத்தோலிக்கத்தைப் பரப்பினர். எனினும், 1658ம் ஆண்டில், இலங்கையை ஆக்ரமித்த டச்சு நாட்டவர், பிற கிறிஸ்தவ சபையைப் பரப்பி, கத்தோலிக்கரைத் துன்புறுத்தினர். அச்சமயத்தில், இலங்கையில், கத்தோலிக்க விசுவாசம் உயிரூட்டம் பெற, இரகசியமாகப் பணியாற்றியவர் அருள்பணி புனித ஜோசப் வாஸ்.

இந்தியாவின், Benaulimல் 1651ம் ஆண்டு பிறந்த புனித ஜோசப் வாஸ் அவர்கள், 1676ம் ஆண்டில் இலங்கையில் மறைப்பணியாற்றச் சென்று, 1711ம் ஆண்டில், இலங்கையின் கண்டியில் உயிர் நீத்தார்.

ஆதாரம் : UCAN/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.