2017-01-23 16:15:00

அருள்பணி டாமின் விடுதலைக்காக இந்திய திருஅவை செபம்


சன.23,2017. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், ஏமன் நாட்டிலிருந்து கடத்தப்பட்ட சலேசிய சபையின் அருள்பணி டாம் உழுன்னலில் அவர்களின் விடுதலைக்காக இந்திய மறைமாவட்டங்களில், கடந்த வார இறுதியில் சிறப்பு செப வழிபாடுகள் இடம்பெற்றன.

மகராஷ்டிராவின் Bandra கோவிலில் இடம்பெற்ற செப வழிபாட்டில், பிற கிறிஸ்தவ சபைகளின் அங்கத்தினர்களும் கலந்துகொண்டனர். இவ்வழிபாட்டில் கலந்துகொண்ட வட இந்திய கிறிஸ்தவ சபையின், அதாவது ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையின் போதகர் தாமஸ் ஜேக்கப் பேசுகையில், அருள்பணி டாம் அவர்களின் பாதுகாப்பான விடுதலைக்கும், அவரை கடத்தி வைத்திருப்போரின் மனமாற்றத்திற்கும் செபிப்பதாக உரைத்தார்.

இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் அவர்களின் விண்ணப்பத்தின்பேரில், இந்தியா முழுவதும் கத்தோலிக்கர்களால், அருள்பணி டாமின் விடுதலைக்காக செப வழிபாடு நடத்தப்பட்டது.

திருவனந்தபுரத்தின் புனித மரியன்னை பேராலயத்தில் நடந்த செப வழிபாட்டில், விசுவாசிகள் அனைவரும் மெழுகுதிரிகளை தாங்கியவர்களாக இரவு கண்விழிப்பு செபத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 10 மாதங்களாக கடத்தி வைக்கப்பட்டிருக்கும் சலேசிய சபை அருள்பணி டாம் அவர்களின் விடுதலைக்காக, திருத்தந்தையும் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளார்.

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.