2017-01-23 16:13:00

மாஃபியா, மரணக் கலாச்சாரத்தின் வெளிப்பாடு


சன.23,2017. மாஃபியா மற்றும், பயங்கரவாதத்திற்கு எதிரான இத்தாலிய அரசு அமைப்பின் அங்கத்தினர்களை, இத்திங்கள் காலை திருப்பீடத்தில் சந்தித்து, தன் பாராட்டுக்களைத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியின் மூன்று முக்கிய குற்றக் கும்பல்களான, மாஃபியா, கமோரா, த்ரான்கெத்தா ஆகியவை, நாட்டின் பொருளாதாரக் குறைபாடுகளையும், சமூக மற்றும், அரசியல் சூழல்களையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, வன்முறைகளையும், அடக்குமுறைகளையும் கையாண்டு வருவது பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, அதற்கு எதிரான இத்தாலிய அரசுத்துறையின் நடவடிக்கைகளைப் பாராட்டினார்.

இலஞ்ச ஊழல், கட்டாயப்படுத்தி பணம் பறித்தல், சட்டவிரோதப் போதைப்பொருள் மற்றும், ஆயுதக் கடத்தல், மனிதர்களை, குறிப்பாக, குழந்தைகளை, வர்த்தகப் பொருள்களாகக் கடத்தி அடிமைப்படுத்தல் போன்றவற்றை எதிர்த்துப் போரிடுவதற்கான உறுதிப்பாட்டைப் பாராட்டியத் திருத்தந்தை, பலவீனர்களிலும் பலவீனர்களாக இருக்கும் குடியேற்றதாரர்களை, வியாபாரப் பொருள்களாக நடத்துபவர்களுக்கு எதிரான சட்ட முறையான நடவடிக்கைக்கும் அழைப்பு விடுத்தார்.

இயேசுவைப் பின்பற்றுகிறவர்களோ, அமைதி, உடன்பிறந்த உணர்வு, நீதி, ஏற்புடைமை மற்றும் மன்னிப்பு குறித்த எண்ணங்களைக் கொண்டிருப்பார்கள், அதற்கு மாறாக, மாஃபியா என்பதோ, மரணக் கலாச்சாரத்தின் வெளிப்பாடு என, மாஃபியாவுக்கு எதிரான, இத்தாலிய அரசுத்துறை  அங்கத்தினர்களிடம்  கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.