2017-01-23 15:56:00

வாரம் ஓர் அலசல் – வேர்களை மறக்க வேண்டாம்


சன.23,2017. ‘‘நூறு இளைஞர்களைத் தாருங்கள் இந்த உலகில் மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டுகிறேன்’எனச் சொன்னார் சுவாமி விவேகானந்தர். கடந்த வாரத்தில் இந்தக் கூற்றை நனவாக்கிய தமிழக இளையோரை இந்த உலகமே வியந்து பாராட்டியது. ஆனால், இத்திங்கள் காலை நடந்த வன்செயல்களைப் பார்க்கும்போது, அறிக்கை வெளியிடவில்லை, தேதி குறிக்கவில்லை, போஸ்டர் அடிக்கவில்லை, அண்ணன் அழைக்கிறார் என்கிற ஆர்ப்பரிப்பு இல்லை. பிரியாணி - வாட்டர் பாட்டில் - ஆளுக்கு 500 ரூபாய் பணம்... இப்படி எதுவுமே இல்லாமல், யாரும் தலைமை தாங்காமல், தன்னெழுச்சியாக திரண்ட இளையோர் இப்படிச் செய்திருப்பார்களா என்பதில் சந்தேகம் எழுகிறது. இத்திங்கள் காலை அமைதி குலையத் தொடங்கியதற்குப் பின்னணியில், வேறு ஏதோ அந்நிய சக்திகள் இருப்பதாகவே நினைக்கத் தோன்றுகின்றது. அகிம்சைக்கு வழிகாட்டிய தமிழகத்தின் மரபுகள் காக்கப்பட்டு, அனைவரும், நலமுடன் அமைதியில், ஒற்றுமையாக வாழ வேண்டுமென்று விரும்புகிறோம். இதற்கிடையே, தமிழக அரசின் சட்டத்தின் மூலம் மிருக வதை தடுப்பு சட்டத்திலிருந்து, ஜல்லிக்கட்டுக்கு விலக்கு கிடைத்தது. இதனால், ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடை நீங்கியது என முதல்வர் பன்னீர் செல்வம் அவர்கள், இத்திங்களன்று அறிவித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் நடந்து வந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை போராட்டக்காரர்கள் வாபஸ் பெற்றனர். சட்டசபையில் ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, போராட்டக்காரர்கள் அமைதியாகக் கலைந்து செல்ல துவங்கினர் என, இத்திங்கள் மாலை செய்திகள் கூறுகின்றன.

ஜல்லிக்கட்டு அதாவது, ஏறுதழுவல் என்ற வீர விளையாட்டை தடை செய்பவர்களின் உள்நோக்கம் பற்றி கடந்த சில நாள்களில், சமூக வலைத்தளங்களில் பல விழிப்புணர்வு தகவல்கள் வெளி வந்தன. நாட்டு மாடுகளைக் காப்பாற்றுவது, அந்த மாடுகளின் பாலை அருந்துவதன் அவசியம், ஜெர்சி மாடுகளின் பாலை அருந்துவதால் ஏற்படும் நோய்கள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், இன்னும், கோக், ஸ்பரைட், ஃபான்ட்டா போன்ற வெளிநாட்டுத் தயாரிப்புப் பானங்களின் தீமைகள் போன்றவை பற்றி, மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் பல செய்திகளைப் பகிர்ந்து கொண்டனர். இதன் பயனாக, வர்த்தக கழகம், தமிழகத்தில் இந்தப் பானங்களை விற்பதை நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லியிருக்கின்றனர். அபிநயா என்ற மருத்துவர், உயிரியல் தொழிநுட்பம் கற்றவர். பெண்கள் கருவுறுதல் தொடர்புடைய Polycystic ovary syndrome (PCOS) என்ற நோய் ஏற்படுவதற்கு காரணம் பற்றி, சமூக வலைத்தளத்தில், சமூக அக்கறையோடு பகிர்ந்து கொண்டுள்ளார்....

காப்பி, டீயில் நாம் அதிகம் சேர்க்கும் வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன வேதியப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை நாம் தெரிந்துகொண்டால், இனி அதைத் தொடக்கூட மாட்டோம் என்று சொல்கின்றனர். வெள்ளைச் சீனி, தயாரான நாளிலிருந்து, ஆறு மாத காலத்துக்கு அதிகமான சீனிகளைச் சாப்பிடக் கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் வேதியப் பொருள், மஞ்சள் நிறமாக மாறி, வீரியமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது. குடலில் மட்டுமல்ல, பல்வலி, பல்சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற பெரிய நோய்கள் அனைத்துக்கும் முக்கிய காரணியாக அமைகின்றது என்று சொல்கிறார்கள். இதற்கு மாறாக, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் இரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை நோயோ ஏற்படாது என்றும் சொல்கிறார்கள். இனிப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த பிற உணவுப்பொருள்களைப் போலல்லாமல், வெல்லம் கல்லீரலைச் சுத்தம் செய்து உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். வெல்லத்தில் உள்ள ஊட்டச்சத்துகள், பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் சிக்கல்களையும், அதனால் ஏற்படும் வலிகளையும் சரிப்படுத்தும். வெல்லத்தில் நிறைந்திருக்கும் அதிக அளவு மக்னீசியம் உட்பொருள், தொண்டைப் புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. வெல்லத்தின் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம், உடலில் அமிலங்களின் அளவை சரிவரப் பராமரிக்க உதவுவதால் இரத்த அழுத்தம் சாதாரணமாக இருக்க வழிசெய்கிறது. உலகத்தரம் வாய்ந்த மிளகு பற்றி, வலைத்தளத்தில் வெளிவந்த ஒரு பகிர்வு இதோ..

நாகரீகம் என்று போர்வையில், கடையில் வாங்கும் பானங்களுக்கும், உணவுகளுக்கும் பணத்தைச் செலவழித்து, நோய்களை உற்பத்தி செய்கிறோம். இதற்கு மாறாக,  வீட்டில் கிடைக்கும் வடித்த கஞ்சி, நீர் ஆகாரம் போன்றவற்றை குடித்தால், நோய்கள் நம்மை அணுகவிடாமல் செய்யலாம்.  பாஸ்ட் புட்டைத் தவிர்த்தாலே இந்திய சமூகம், சர்க்கரை நோயில் இருந்து, மிகப்பெரிய அளவில் காப்பாற்றப்படும் என்று சொல்கிறார் காஞ்சிபுரம் டாக்டர், சத்திய நாராயணன். மேலும், சர்க்கரை நோய் பற்றி சோதனை செய்து கொள்ள தயங்கக் கூடாது. எவ்வளவு சீக்கிரம் சோதனை செய்து கொள்கிறோமோ, அவ்வளவு எளிதில் சர்க்கரை நோயின் தாக்கத்தில் இருந்து, நம்மை விடுவித்துக் கொள்ளலாம் என்றும் இவர் சொல்கிறார். டாக்டர், சத்திய நாராயணன், சர்க்கரை நோய் விழிப்புணர்வுக்காக, ஐந்து முறை கின்னஸ் சான்று, ஒருமுறை லிம்கா புக் ரெக்கார்டு, இந்தியா புக் ஆப் ரெக்கார்டு, ஆசிய புக் ஆப் ரெக்கார்டு, தமிழ்நாடு புக் ஆப் ரெக்கார்டு என, பல பரிசுகள் பெற்றிருக்கிறார். அப்துல்கலாம் சேவாரத்னா விருது, பாரத் ஜோதி விருது போன்றவைகளையும் இவர் பெற்றிருக்கிறார். இந்த விருதுகளையெல்லாம்விட, தான் பெரிதாக நினைப்பது, வாழ்நாள் முழுவதும் துரத்தும் சர்க்கரை நோய் இல்லாத மக்களின் வாழ்வைத்தான் என்று சொல்லியிருக்கிறார் டாக்டர், சத்திய நாராயணன். மருத்துவக் கட்டணமாக, ஐம்பது ரூபாய் மட்டுமே வாங்கும் இவர், ஏழைகள் மற்றும், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாவும் சிகிச்சை அளிக்கிறார் என, ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

நாட்டுக் கரும்புக்குப் பதிலாக, Hybrid கரும்பினால், மண் வளம் பாதிக்கப்படும். நாட்டு வாழைப்பழத்திற்குப் பதிலாக, விதையில்லா வாழைப்பழத்தால், ஆண்மைக் குறைவு ஏற்படும். நாட்டுத் திராட்சைக்குப் பதிலாக, விதையில்லாத் திராட்சையினால், உடல் எடை அதிகரிக்கும். நாட்டு மரங்களுக்குப் பதிலாக, ஒட்டு மரத்தினால், ஆயுள் குறைவு ஏற்படும், காற்று மாசு அதிகரிக்கும். இப்படி.. broiler கோழி, ஜெர்சி மாடு, வேதிய உரம் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளுக்கு யார் பொறுப்பு? சிந்திப்போம்.

தேவையற்ற பொருட்களை வாங்கும் வழக்கம், தேவையான பொருட்களை விற்கும் நிலைக்கு கொண்டு வந்துவிடும். எனவே, சமூகநலனில் அக்கறை கொண்ட பலரும், அயல்நாட்டு மோகத்தை உணவிலும், உடையிலும், கலாச்சாரத்திலும் தவிர்த்து நடக்கவே, பரிந்துரைக்கின்றனர். உடலுக்கும், மனதுக்கும் நல்ல சுகம்தரும் தாய்நாட்டு மரபுகளைப் பேணிக் காப்போம். நம் வேர்களை மறக்காதிருப்போம். நாம் விரும்பும் மாற்றத்தை நம்மிலிருந்து தொடங்குவோம் (அண்ணல் காந்தி).

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.