2017-01-24 15:26:00

51வது உலக சமூகத் தொடர்பு நாளுக்கு திருத்தந்தையின் செய்தி


சன.24,2017. நம்மைச் சுற்றியுள்ளவர்கள், எதார்த்தம் மற்றும் நம்பிக்கையோடு உலகத்தை நோக்குவதற்கு உதவும் நோக்கத்தில், பிறர்மீது முற்சார்பு எண்ணங்களை விலக்கி, சந்திப்புக் கலாச்சாரத்தைப் பேணி வளர்க்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

51வது உலக சமூகத் தொடர்பு நாளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள செய்தியில், தாங்கள் தொடர்பு கொள்பவர்களுடன், வளமையான உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளும் நோக்கத்தில், இச்செய்தியை, ஊடகத்துறையில் இருப்பவர்கள், தனிப்பட்ட உறவுகளில் இருப்போர் என, எல்லாருக்கும் வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். 

மோசமான செய்திகள் குறித்து தொடர்ந்து கவனம் செலுத்துவதால் ஏற்படும் அச்சத்தையும், பதட்டத்தையும் களையவேண்டும் என்பதில், தான் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, திருப்தியற்ற மற்றும், ஒதுங்கியிருக்கும் நிலை, சில நேரங்களில், தீமைகளுக்கு எல்லைகளே இல்லை என்ற எண்ணத்தையும், அச்சத்தையும் உருவாக்காமல் இருப்பதற்காக, நாம் உழைப்போம் என்று, கேட்டுக்கொண்டுள்ளார்.

நல்ல நேர்மறையான செய்திகள் விலைபோகாது, மனிதத் துன்பங்களின் கொடுமைகளும், தீமையின் தெளிவில்லாத செய்திகளும் வரவேற்பைப் பெறும் என்ற எண்ணம் ஊடகத்துறையில் நிலவும் சூழலில், நம் மனச்சாட்சிகள், நம்பிக்கையின்மையில் விழக்கூடிய சோதனைகள் எப்போதும் உள்ளன எனவும், தன் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை. நம் காலத்தில் வாழும் மக்களுக்கு, நற்செய்தியை மையப்படுத்திய கதைகளை வழங்குமாறு, நம் ஒவ்வொருவரையும் விண்ணப்பிப்பதாக, மேலும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவாகிய நற்செய்தி, இறையாட்சியின் விதையில் நம்பிக்கை, தூய ஆவியாரின் வழிகாட்டுதலில் அர்ப்பணம் ஆகிய தலைப்புக்களில், இச்செய்தியை விளக்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வருகிற மே 28ம் தேதி கடைப்பிடிக்கப்படும் 51வது உலக சமூகத் தொடர்பு நாளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள செய்தியை, திருப்பீட சமூகத்தொடர்பு செயலகத் துறைத் தலைவர், பேரருள்திரு Dario Edoardo Viganò அவர்கள் இச்செவ்வாயன்று, செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டார்.

“அஞ்சாதே, ஏனெனில் நான் உன்னோடு இருக்கிறேன் (எசா.43:5): நம் காலத்தில் நம்பிக்கை மற்றும், உறுதிப்பாட்டை வழங்குவது” என்ற,  தலைப்பில், திருத்தந்தையின் இச்செய்தி அமைந்துள்ளது.

இச்செய்தியாளர் கூட்டத்தில் CNN  நிருபர் Delia Gallagher, El País நிருபர் Pablo Ordaz ஆகிய இருவருடன் ஓர் உரையாடலும் இடம்பெற்றது.

செய்தியாளர்களின் பாதுராவலராகிய புனித பிரான்சிஸ் சலேசியார் விழாவான சனவரி 24ம் தேதி, திருத்தந்தையின் உலக சமூகத் தொடர்பு நாள் செய்தி, ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.