2017-01-25 15:15:00

கிறிஸ்தவ ஒன்றிப்பு மாலை வழிபாட்டில் திருத்தந்தை


சன.25,2017. "இதை நான் மீண்டும் சொல்ல விழைகிறேன்: இணைந்து நடப்பது, சந்திப்பது, செபம் மற்றும் நற்செய்தியை பறைசாற்றுதல் வழியே, நாம் கிறிஸ்தவ ஒன்றிப்பை அடைய முடியும்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக, சனவரி 25, இப்புதனன்று வெளியாயின.

சனவரி 25, இப்புதனன்று கொண்டாடப்பட்ட திருத்தூதர் புனித பவுலின் மனமாற்றம் திருநாளுக்கு முன்னதாக, கிறிஸ்தவ ஒன்றிப்புக்கென செபிக்கும் வாரம், கிறிஸ்தவ உலகெங்கும் கடைபிடிக்கப்பட்டது.

சனவரி 18, கடந்த புதன் முதல், 25, இப்புதன் முடிய கடைபிடிக்கப்பட்ட கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட பல டுவிட்டர் செய்திகள், கிறிஸ்தவ ஒன்றிப்பின் பல பரிமாணங்களை வெளிச்சத்திற்குக் கொணர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், உரோம் நகரின் வெளிச்சுவருக்கருகே அமைந்துள்ள புனித பவுல் பசிலிக்காவில், இப்புதன் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் மாலை திருப்புகழ் வழிபாட்டினை, திருத்தந்தை பிரான்சிஸ் தலைமையேற்று நடத்துகிறார்.

திருத்தந்தை வழிநடத்தும் இந்த மாலை வழிபாட்டில், கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் கர்ட் கோக், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தையின் பிரதிநிதியாக, ஆயர் Gennadios Zervos, மற்றும் ஆங்கிலிக்கன் சபையின் பிரதிநிதியாக, ஆயர் David Moxon ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.