2017-01-25 15:27:00

சிரியா நாட்டின் அலெப்போ நகரில் திருப்பீடத்தின் பிரதிநிதி


சன.25,2017. மனிதரின் முழுமையான முன்னேற்றம் என்ற பணிக்கென அண்மையில் திருப்பீடத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஓர் அவையின் பிரதிநிதியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிரியா நாட்டின் அலெப்போ நகருக்கு தன் சார்பில் அனுப்பி வைத்தார்.

திருத்தந்தையின் வேண்டுகோளுக்கிணங்க, சனவரி 18ம் தேதி முதல், 23ம் தேதி முடிய, அருள்பணி Giampietro Dal Toso அவர்கள் அலெப்போ நகரில் மேற்கொண்ட ஒரு பயணத்தில் அவருடன், சிரியா நாட்டு திருப்பீடத் தூதர், கர்தினால் மாரியோ செனாரி அவர்களும் சென்றார்.

அலெப்போ நகரில் பணியாற்றும் கிறிஸ்தவ அமைப்புக்கள், பிறரன்பு அமைப்புக்கள் அனைத்தையும் இக்குழு பார்வையிட்டதாக, அருள்பணி Dal Toso அவர்கள் கூறினார்.

கடந்த வாரம் நடைபெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு வார நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, அலெப்போ நகரில் நடைபெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாட்டில் இந்தப் பிரதிநிதிகள் குழு கலந்துகொண்டது.

மேலும், இக்குழுவினர், அலெப்போ நகரில் பணியாற்றும் இஸ்லாமிய அமைப்புக்களைச் சந்தித்தபோது, கலாச்சாரங்களையும், மதங்களையும் மதிக்கும் ஒரு கல்வியை சிரியா நாட்டு குழந்தைகளுக்கு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.