2017-01-26 16:04:00

'மெய்நிகர் உண்மை' உலகில் வாழும் இளையோருக்கு எச்சரிக்கை


சன.26,2017. 'மெய்நிகர் உண்மை' (Virtual reality) என்ற உலகில் வாழும் இளையோர், நல்லவை, தீயவை இவற்றை பகுத்தறியும் அறிவுத்திறன் கொண்டிருக்கவும், தொழிநுட்பங்களுக்கு அடிமையாகாமல் இருக்கவும் வேண்டும் என்று பெங்களூரு பேராயர், பெர்னார்டு மொராஸ் அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

2018ம் ஆண்டு, இளையோரை மையப்படுத்தி, வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்தையொட்டி செய்தி வெளியிட்டுள்ள பேராயர் மொராஸ் அவர்கள், 'மெய்நிகர் உண்மை' உலகில் இளையோர் கட்டுண்டு போகாமல் இருக்கவேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களும், தொழில் நுட்பம் மிகுந்த தொடர்பு சாதனங்களும் பெருகியுள்ள இக்காலத்தில், உண்மையும் பொய்யும் எளிதாகக் கலக்கப்பட்டு, வேறுபாடின்றி நம்மை வந்தடைவதால், இளையோர் மிக விழிப்பாக செயல்படவேண்டும் என்று, பேராயர் மொராஸ் அவர்கள், தன் செய்தியில் விண்ணப்பித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் தங்கள் தனிப்பட்ட விவரங்களை பகிர்ந்துகொள்ளும் இளையோர், குறிப்பாக, இளம் பெண்கள், பல வழிகளில் துன்பங்களுக்கு உள்ளாவதை, பேராயரின் செய்தி சிறப்பாகக் குறிப்பிட்டு எச்சரித்துள்ளது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.