2017-01-27 16:13:00

இரத்த தானம் பற்றிய WHOன் கொள்கைகளுக்கு திருப்பீடம் ஆதரவு


சன.27,2017. இரத்த தானம் மற்றும், மனிதர் பற்றிய மருத்துவக் கண்டுபிடிப்புகளில், வலுவற்ற தனியாட்கள் பயன்படுத்தப்படுவது குறித்து, கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று, WHO என்ற, உலக நலவாழ்வு நிறுவனத்தின் கூட்டத்தில், திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டார்.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் WHO நிறுவனத்தின் கூட்டத்தில் இவ்வெள்ளியன்று உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும், பன்னாட்டு நிறுவனங்களுக்கான, திருப்பீடப் பிரதிநிதி பேராயர் Ivan Jurkovič அவர்கள், இவ்வாறு கேட்டுக்கொண்டார்.

இரத்த தானம் தொடர்புடைய உலகளாவிய ஒருமித்த கொள்கைகள் குறித்த WHOவின், 140வது செயல்திட்டக் குழுவின் கூட்டத்தில் உரையாற்றிய, பேராயர் Jurkovič அவர்கள், இரத்த தானம் பற்றிய எல்லா விவகாரங்களிலும், அதை வழங்குபவர்களின் மாண்பு, முக்கிய இடத்தைப் பெற வேண்டுமென்று வலியுறுத்தினார்.

மனித வர்த்தகம், மனித உறுப்புக்களையும், திசுக்களையும் விற்பது தொடர்பாக, 2015ம் ஆண்டில், ஐ.நா. பொது அவையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பேசியதையும் சுட்டிக்காட்டினார் பேராயர் Ivan Jurkovič.

சனவரி 23ம் தேதி தொடங்கிய இக்கூட்டம், வருகிற பிப்ரவரி முதல் தேதி நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.