2017-01-28 15:15:00

இக்கால இளையோர் போலியில்லாத ஆன்மீக வாழ்வைத் தேடுகின்றனர்


சன.28,2017. துறவு சபைகளின் உறுப்பினர்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் வெளியேறும் ஒரு நிலையை திருஅவை எதிர்கொள்கின்றது, இது, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வையும், திருஅவையையும் பலவீனப்படுத்துகின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூறினார்.    

துறவு சபைகள் பேராயம் நடத்திய, நிறையமர்வு ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஏறக்குறைய நூறு பிரதிநிதிகளை, இச்சனிக்கிழமை நண்பகலில், திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறினார்.

துறவு வாழ்வுக்கு பிரமாணிக்கம் மற்றும், அவ்வாழ்வை விட்டு விலகுதல் என்ற தலைப்பில், இக்கூட்டம் நடந்தது பற்றிப் பேசிய திருத்தந்தை, இக்காலத்தில், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வுக்குப் பிரமாணிக்கமாக இருப்பது குறைந்து வருவதை, புள்ளி விபரங்கள் காட்டுகின்றன என்றும் கூறினார்.

தங்களின் இறையழைப்பு பற்றித் தேர்ந்து தெளிந்த பின்னர், தங்களுக்கு அழைத்தல் இல்லையெனச் சொல்லி, சிலர், துறவு வாழ்வைத் துறக்கின்றனர், ஆயினும், சிலர், துறவு வாழ்வில், நிரந்தர அர்ப்பணம் கொடுத்து, பல ஆண்டுகளுக்குப் பின் விலகுகின்றனர், இது ஏன் என்ற கேள்வியை முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இக்காலத்திய கலாச்சாரம் இதற்கு முதல் காரணம் என்றும், பொருளாதார விதிமுறைகள், நன்னெறி வாழ்வை ஆட்சிசெய்யும் ஒரு சமுதாயத்தில், நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம், இது, நுகர்வுத்தன்மையைப் புகுத்தி, எளிமையான வாழ்வின் அழகை மறக்கச் செய்கின்றது என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இக்கால இளையோர், குழப்பம் நிறைந்தவர்களாக, அதேநேரம், சவால்களை முன்வைப்பவர்களாக உள்ளனர் என்றும், இவர்கள், போலியில்லாத, ஓர் உண்மையான ஆன்மீக வாழ்வைத் தேடுகின்றனர் என்றும், தெரிவித்தார்,  திருத்தந்தை.

துறவு சபைகள், தங்களின் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வுக்குப் பிரமாணிக்கமாக இருப்பதற்கு முரணாக வாழ்வதை எச்சரித்த திருத்தந்தை, இத்தகைய சூழல்களில், வாடிக்கையான செயல்கள், சோர்வு, நிர்வாகச் சுமை, உள் பிரிவினைகள், அதிகாரத் தேடல், சபைகளை நிர்வகிப்பதில் உலகப்போக்கு, சில சமயங்களில் சர்வாதிகாரங்களாக மாறும் அதிகாரம் போன்றவை ஏற்படுகின்றன என்றும் கூறினார், திருத்தந்தை.

குழுக்களில்,உடன்பிறப்பு உணர்வுடன் வாழ்வதற்கு முக்கியத்துவம் கொடுக்குமாறும் வலியுறுத்திய திருத்தந்தை, குழு செபம், இறைவார்த்தையை செபச்சூழலில் வாசிப்பது, திருப்பலி மற்றும் ஒப்புரவு அருளடையாளத்தில் ஆர்வமுடன் பங்கெடுப்பது, சகோதரத்துவ உரையாடல், உறுப்பினர்களுக்குள் உண்மையான தொடர்பு, சகோதரத்துவ திருத்தம், பாவம் செய்த உறுப்பினர்கள்மீது இரக்கம், பொறுப்புக்களைப் பகிர்தல் போன்றவைகளால், துறவற குழுவாழ்வு அமைய வேண்டுமெனவும் கூறினார். தரமான ஆன்மீக வழிகாட்டிகளைத் தயார் செய்வது அவசியம் எனவும் கூறியத் திருத்தந்தை, குழு உறுப்பினர்களோடு எப்போதும் உடன் இருந்து வழிகாட்டுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துச் சொன்னார். பிரமாணிக்கத்துடன் தனிமையாக வாழ்வது அல்லது, கவனம் மற்றும், பொறுமையுடன் செவிசாய்க்க இயலாமல் இருக்கும் அருள்சகோதர, அருள்சகோதரிகளின் வழிகாட்டுதலுடன் வாழ்வது கடினம் எனவும், கூறினார், திருத்தந்தை. இறைவனின் வழியில் அனுபவமிக்க அருள்சகோதர, அருள்சகோதரிகள் தேவை என்றும், நல்ல தலைவர்கள் இல்லாமையினாலே, பல இறையழைத்தல்கள் இழக்கப்படுகின்றன என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.