2017-01-28 15:31:00

ஹான்சென் நோயாளர்க்கெதிரான பாகுபாடுகள் களையப்பட அழைப்பு


சன.28,2017. தொழுநோய் என்ற, ஹான்சென் நோயாளர்களை, நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ பாகுபடுத்தும் எல்லாவித நடவடிக்கைகளையும் மாற்றுவதற்கு, அனைத்து நாடுகளும் தங்களை அர்ப்பணிக்குமாறு, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், கேட்டுக்கொண்டுள்ளார்.

சனவரி 29, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும், 64வது உலக ஹான்சென் நோயாளர் தினத்தை முன்னிட்டு, செய்தி வெளியிட்டுள்ள, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், ஹான்சென் நோயிலிருந்து குணமானவர்கள், மீண்டும் சமூகத்தில் ஒன்றிணைக்கப்படுவதற்கு மேலும் முயற்சிகள் அவசியம் எனக் கூறியுள்ளார்.

இந்நோயிலிருந்து குணமானவர்கள், இந்தியா, பிரேசில், கானா போன்ற நாடுகளில், ஏற்கனவே சமூகத்தோடு இணைக்கப்பட்டு வருகின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ள கர்தினால் டர்க்சன் அவர்கள், இந்நோய் குறித்த அறியாமையும்,  இம்மக்கள், சமூகத்தில் ஒன்றிணைக்கப்படாமல் இருப்பதற்கு, ஒரு காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

உலகில், 1985ம் ஆண்டில், ஹான்சென் நோயாளர்களின் எண்ணிக்கை, ஐம்பது இலட்சத்திற்கு அதிகமாக இருந்தது என்றும், தற்போது, ஒவ்வோர் ஆண்டும், ஏறக்குறைய இரண்டு இலட்சம் பேர், இந்நோய்க் கிருமிகளால் தாக்கப்படுகின்றனர் என்றும், கர்தினாலின் செய்தி கூறுகிறது.

ஒவ்வோர் ஆண்டும், சனவரி மாதம் கடைசி ஞாயிறன்று, உலக ஹான்சென் நோயாளர் தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது. தொழுநோய் என்று முன்பு அழைக்கப்பட்ட, ஹான்சென் நோய்க் கிருமிகளால், உலகில், இரண்டு நிமிடங்களுக்கு ஒருவர் வீதம் தாக்கப்படுகின்றனர் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.