2017-01-31 14:51:00

350 ஆண்டுகள் மறைப்பணித்தளத்தைக் கொண்டாட தாய்லாந்து திருஅவை


சன.31,2017. தாய்லாந்து நாட்டில், முதல் கத்தோலிக்க மறைப்பணித்தளம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டதன் 350ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, மூன்று ஆண்டுகள் தயாரிப்புக்களைத் தொடங்குவதற்குத் திட்டமிட்டுள்ளது அந்நாட்டுத் தலத்திருஅவை.

சியாம் மறைப்பணித்தளம் உருவாக்கப்பட்டதன் 350ம் ஆண்டு நிறைவு விழா, 2019ம் ஆண்டு ஜூலை 4ம் தேதியன்று சிறப்பிக்கப்படவுள்ளவேளை, இந்த 2017ம் ஆண்டிலிருந்து, இதற்காக, ஆன்மீகத் தயாரிப்புக்களை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளனர் தாய்லாந்து ஆயர்கள்.

போர்த்துக்கல் நாட்டு Jerônimo da Cruz, Sebastião do Canto ஆகிய இரு தொமினிக்கன் சபைத் துறவிகள், 1567ம் ஆண்டு சியாம் பகுதிக்கு வந்து நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கினர், எனவே முதல் வெளிநாட்டு மறைப்பணியாளர்கள் சியாம் வந்ததன் 450ம் ஆண்டு நிறைவு 2017ம் ஆண்டில் இடம்பெறுகின்றது என, தாய்லாந்து ஆயர்கள் கூறியுள்ளனர்.

இருந்தபோதிலும், 1669ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி, ஓர் ஆயரின் தலைமையில், சியாம் மறைப்பணித்தளம் உருவாக்கப்பட்டதே முக்கியமானது எனவும், தாய்லாந்து ஆயர்கள் கூறியுள்ளனர்.

தொமினிக்கன் சபையினரைத் தொடர்ந்து, பிரான்சிஸ்கன் மற்றும் இயேசு சபையினர் தாய்லாந்து சென்றனர்.

ஆதாரம்: AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.