2017-01-31 15:26:00

நம்மைக் குறித்த அனைத்து விடயங்களிலும் ஆர்வமுள்ளவர் இயேசு


சன.31,2017. நம் பார்வையை எப்போதும் இயேசுவை நோக்கியே வைத்திருந்தால், அவர் நம்மை அன்போடு எப்போதும் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறார் என்பதைக் கண்டு வியப்படைவோம் என, இச்செவ்வாய்க்கிழமை காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் மீது நம் பார்வையை நிலைநிறுத்தி, விடாமுயற்சியுடன் நம் விசுவாசத்தில் தொடர்ந்து செல்ல வேண்டும் என, நாம் கேட்கப்படுகிறோம், அதேவேளை, இயேசுவோ எப்போதும் நம்மை உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறார், எந்த ஒரு கூட்டத்திலும் அவர் பிரசன்னமாயிருக்கிறார் என, சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

இயேசு, தான் வாழ்ந்த காலத்தில், காவலர்களின் துணைகொண்டு எப்போதும் பாதுகாப்புடன் நடந்துசெல்லவில்லை, அவர் எங்குச் சென்றாலும், மக்கள் அவரை நெருங்கி வந்தனர், அவரும் அவர்களோடு நெருக்கமாக இருந்தார் என, தன் மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களும் அவரைத் தேடினர், அவரும் மக்களைத் தேடினார் என்பது மட்டுமல்ல, மக்களின் பார்வை இயேசுவிலும், இயேசுவின் பார்வை மக்களிலும் இருந்தது எனக் கூறினார்.

இயேசுவின் பார்வையோ பொதுவான ஒரு பார்வையல்ல, மாறாக ஒவ்வொருவரையும் தனித்தனியாக நோக்கும் பார்வை என, மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

12 ஆண்டுகள் இரத்தப்போக்கு நோயினால் துன்புற்ற பெண், தன்னைத் தொட்டதை உணர்ந்தது மட்டுமல்ல, அவருக்குக் குணமளித்த இயேசு, 12 வயது சிறுமியையும் சாவிலிருந்து மீட்டு, அவருக்கு உணவளிக்கச் சொல்கிறார் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெரிய விடயங்களையும், சிறிய விடயங்களையும் அவர் உற்று நோக்குகிறார் என்பது இதிலிருந்து தெரிகிறது என்றார்.

நம்மைக் குறித்த பெரிய விடயங்களிலும், சிறிய விடயங்களிலும் அக்கறை கொண்டுள்ள இயேசுவில், நம் பார்வையை பதித்து, விசுவாசத்தில் தொடர்ந்து முன்னேறும்போது, அவர் நம்மில் பதித்துள்ள பார்வையைக் கண்டு வியப்படைவோம் என உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.