2017-02-01 15:39:00

இரக்கம், கிறிஸ்தவ கலாச்சாரம் - கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ்


பிப்.01,2017. இரக்கம் நம் விருப்பத் தேர்வு மட்டுமல்ல, அது, கிறிஸ்தவ கலாச்சாரம் என்று இந்திய கத்தோலிக்க இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர்கள் அவையின் தலைவர், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள் கூறினார்.

சனவரி 31, இச்செவ்வாய் முதல், பிப்ரவரி 8, அடுத்த புதன் முடிய, மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் நடைபெறும் இந்திய கத்தோலிக்க இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர்கள் அவையின் 29வது நிறையமர்வு கூட்டத்தின் துவக்கத் திருப்பலியை தலைமையேற்று நடத்திய மும்பை பேராயர், கர்தினால் கிரேசியஸ் அவர்கள், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.

குடும்பங்களை மையப்படுத்தி நடைபெறும் இக்கூட்டத்தின் துவக்கத் திருப்பலியில், நன்முறையில் வாழும் குடும்பங்களை, இன்னும் உன்னத நிலையில் வாழும்படி ஆயர்களாகிய நாம் ஊக்குவிக்கவேண்டும் என்று கர்தினால் கிரேசியஸ் அவர்கள், தன் மறையுரையில் கேட்டுக்கொண்டார்.

உலகெங்கிலும் நிலவும் பல்வேறு மதிப்பீடுகளின் தாக்கங்களால், குடும்ப வாழ்வு சிதைந்து வருகிறது என்ற எச்சரிக்கையை விடுத்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், மாறிவரும் உலகின் போக்குகளுக்கு கிறிஸ்தவ குடும்பங்கள் தகுந்த வகையில் பதிலிருக்க, சரியான வழிகளைக் காட்டுவது அவசியம் என்று எடுத்துரைத்தார்.

உலகின் பல நாடுகளில், குடும்பங்கள் சந்திக்கும் அளவு பிரச்சனைகளை, ஆசிய குடும்பங்கள் சந்திப்பதில்லை என்றாலும், உலகப் போக்குகள் ஆசியாவிலும், இந்தியாவிலும் ஊடுருவி, அவை, குறிப்பாக, குடும்பங்களை அதிகம் பாதிக்கின்றன என்பதை உணரவேண்டும் என்று கர்தினால் கிரேசியஸ் அவர்கள் தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : CCBI / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.