2017-02-01 15:49:00

இலத்தீன் வழிபாட்டு முறை கத்தோலிக்க ஆயர்கள் கூட்டம்


பிப்.01,2017. இலத்தீன் வழிபாட்டு முறை கத்தோலிக்க ஆயர்களின் 29வது நிறையமர்வு கூட்டத்தில் கலந்துகொள்ள, இந்தியாவில் பணியாற்றும் 130க்கும் மேற்பட்ட ஆயர்கள், மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் அமைந்துள்ள ஆஷா நிகேதன் வளாகத்தில் இச்செவ்வாயன்று கூடி வந்தனர்.

வத்திக்கானில் நடைபெற்ற இரண்டு ஆயர்கள் மாமன்றத்தின் தொடர்ச்சியாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள 'அன்பின் மகிழ்வு' என்ற திருத்தூது அறிவுரை மடலின் தொடர்ச்சியாகவும் "நமது குடும்பங்களில் அன்பின் மகிழ்வை வளர்த்தல்" என்ற மையக் கருத்துடன், ஆயர்களின் கூட்டம் நடைபெறுகிறது என்று, கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

வறுமை, கல்வி, வேலைவாய்ப்பு, அநீதிகள் என்ற பல பிரச்சனைகளைச் சந்திக்கும் இந்திய கத்தோலிக்க குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவது குறித்து, ஆயர்களின் கூட்டம் கலந்து பேசும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செவ்வாயன்று நிகழ்ந்த முதல் அமர்வில், புதிய ஆயர்களுக்கு, வரவேற்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, குடும்பநல பணிக்குழுவின் தலைவர், ஆயர், லாரன்ஸ் பயஸ் அவர்கள், "இந்தியக் குடும்பங்களின் அனுபவங்களும், சவால்களும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இலத்தீன் வழிபாட்டு முறை கத்தோலிக்க ஆயர் பேரவையில், 132 மறைமாவட்டங்களை சேர்ந்த 182 ஆயர்கள் உறுப்பினர்கள் என்பதும், இது, ஆசியாவிலேயே மிகப் பெரிய பேரவை என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : CCBI / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.