2017-02-01 15:57:00

கிறிஸ்தவர்களை சிக்கவைக்கும் பொறி - முதுபெரும் தந்தை சாக்கோ


பிப்.01,2017. புலம் பெயர்ந்தோரில், கிறிஸ்தவர்களை வரவேற்று, அதே வேளையில், இஸ்லாமியரைத் தடுத்து, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர், டொனால்டு டிரம்ப் அவர்கள் வெளியிட்டுள்ள அரசாணை, மத்தியக் கிழக்குப் பகுதியில் வாழும் கிறிஸ்தவர்களை துன்பத்தில் சிக்கவைக்கும் மற்றொரு பொறி என்று, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, முதலாம் லூயிஸ் சாக்கோ அவர்கள் கூறினார். 

கொடுமைகளைச் சந்திக்கும் மக்களை, மதத்தின் அடிப்படையில் பிரித்து, அவர்களில் கிறிஸ்தவர்களுக்கு முதலிடம் வழங்கும்போது, மத்தியக் கிழக்குப் பகுதியில் வாழும் கிறிஸ்தவர்களை, மேற்கத்திய சக்திகளின் தரகர்கள் என்று பிறர் காண்பதற்கு, இந்தப் பாகுபாடு வழி செய்கிறது என்று, முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் கவலை வெளியிட்டார்.

மத அடிப்படையில் மேற்கொள்ளப்படும் அனைத்து பாகுபாடுகளும், கிறிஸ்தவ மதத்தை இன்னும் ஓர் அந்நிய மதமாகவே கருத வழிவகுப்பதோடு, கிறிஸ்தவர்களை இன்னும் கொடுமைகளுக்கு உள்ளாக்கவும் பிறரைத் தூண்டுகிறது என்று, முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் எச்சரிக்கை விடுத்தார்.

மத அடிப்படையில் பாகுபாடுகள் செய்யாமல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புலம்பெயர்ந்த இஸ்லாமியருக்கு வத்திக்கானில் புகலிடம் தந்ததைப் போல், உலக அரசுகளும், மத பாகுபாடுகளைக் கடந்து, புலம் பெயர்ந்தோரை வரவேற்பது ஒன்றே, இவ்வுலகைக் காக்கும் என்று முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் வலியுறுத்தினார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.