2017-02-01 15:13:00

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை : உயிர்ப்பின் மீதான நம்பிக்கை


பிப்.,01,2017.  அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் திருப்பயணிகள் பெரும் எண்ணிக்கையில் குழுமியிருக்க, கிறிஸ்தவ நம்பிக்கைக் குறித்த திருத்தந்தையின் மறைக்கல்வியுரையின் தொடர்ச்சியாக, இன்று, புனித பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்தின் 5ம்பிரிவில் காணப்படும் ஒரு பகுதி முதலில் வாசிக்கப்பட்டது.

'ஆனால், அன்பர்களே! நீங்கள் இருளில் நடப்பவர்களல்ல; ஆகவே அந்த நாள் திருடனைப் போல் உங்களுக்கு வராது. நீங்கள் எல்லாரும் ஒளியைச் சார்ந்தவர்கள்; பகலில் நடப்பவர்கள். நாம் இரவையோ இருளையோ சார்ந்தவரல்ல.........

ஆனால் பகலைச் சார்ந்த நாம் அறிவுத்தெளிவோடு இருப்போம். நம்பிக்கையையும் அன்பையும் மார்புக் கவசமாகவும், மீட்புபெறுவோம் என்னும் எதிர்நோக்கைத் தலைச்சீராவாகவும் அணிந்துகொள்வோம்.

ஏனெனில் கடவுள் நம்மைத் தம் சினத்துக்கு ஆளாவதற்கு அல்ல, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக மீட்பு அடையவே ஏற்படுத்தியுள்ளார்.

நாம் இருந்தாலும் இறந்தாலும் அவரோடு இணைந்து வாழும்வண்ணம் அவர் நம்பொருட்டு இறந்தார்' (1தெச. 5, 4-5.8-10), என்ற பகுதி வாசிக்கப்பட்டபின், தன் கருத்துக்களை மக்களோடு பகிர்ந்துகொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு சகோதர சகோதரிகளே! இன்று நாம், கிறிஸ்தவ நம்பிக்கைக் குறித்த நம் மறைக்கல்வி உரையின் தொடர்ச்சியாக, புதிய ஏற்பாட்டு நூலாகிய துய பவுலின் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்தின் வரிகள் குறித்துத் திரும்புவோம். இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்ப்பின் மீதான இந்த இளைய கிறிஸ்தவ சமூகத்தின் விசுவாசத்தை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் எழுதும் தூய பவுல் அவர்கள், ஒவ்வொரு விசுவாசியின் வாழ்விலும் இந்த மறையுண்மை தரும் அர்த்தம் குறித்தும் விவரிக்கிறார். ஏனெனில், வருங்கால உயிர்த்தெழுதலின் முதல்கனி இயேசு கிறிஸ்துவே. மரணம் எனும் மறையுண்மைக்கு முன்னால்; நமக்கு நெருக்கமானவர்களின் இழப்பிற்கு முன்னால்; கிறிஸ்தவர்களாகிய நாம், முடிவற்ற வாழ்வு குறித்த இயேசுவின் வாக்குறுதியில் முழுமையான விசுவாசம் கொள்ளும் சவாலைப் பெற்றுள்ளோம். 'மீட்புப் பெறுவோம் என்னும் எதிர்நோக்கைத் தலைச்சீராக அணிந்து கொள்ளுமாறு'(1 தெச. 5:8),  தூய பவுல் தெசலோனிக்கர்களை நோக்கிக் கேட்கிறார். நம் எதிர்நோக்கு நிச்சயமானது, ஏனெனில் இயேசு உயிர்த்தெழுந்தார். ஆகவே, கிறிஸ்தவ நம்பிக்கை என்பது, ஒரு வாழ்க்கை முறை. உயிர்ப்பு குறித்த எதிர்பார்ப்பில் நாம் தினமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த நம்பிக்கையிலும், திரு அவையுடன் நாம் கொள்ளும் ஒன்றிப்பிலும், நமக்குமுன் சென்றவர்கள் அனைவரும், கிறிஸ்துவில் என்றென்றும் வாழ்வர் என செபிக்கவும் செய்கிறோம். நாம் ஒரு நாள் இயேசுவோடும், நமக்கு நெருக்கமாக இருந்தவர்களோடும், உயிர்ப்பு என்னும் மகிழ்வில் இணைந்திருப்போம் என்ற உறுதியான எதிர்பார்ப்பில், நம்மை பலப்படுத்துமாறு இறைவனை நோக்கி வேண்டுவோம்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.