2017-02-01 16:15:00

புலம் பெயர்ந்தோர், பாதுகாப்பு பெறுவதற்கு முழு உரிமை


பிப்.01,2017. மோதல்களாலும், பெரும் இன்னல்களாலும் தங்கள் நாட்டைவிட்டு தப்பியோடும் புலம் பெயர்ந்தோர் அனைவரும், பாதுகாப்பு பெறுவதற்கு முழு உரிமை பெற்றுள்ளனர் என்று, ஐ.நா. பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறினார்.

இன்னல்களிலிருந்து தப்பித்துச் செல்லும் புலம் பெயர்ந்தோருக்கு, பல நாடுகள் தங்கள் எல்லைகளை மூடிவருகின்றன என்பதை, கவலையுடன் சுட்டிக்காட்டிய, கூட்டேரஸ் அவர்கள், அனைத்துலக புலம்பெயர்ந்தோர் சட்டங்களின் அடிப்படையில், அவர்கள் அனைவரும் வரவேற்பும், பாதுகாப்பும் பெறுவது அவர்களின் உரிமை என்று சுட்டிக்காட்டினார்.

ஆப்ரிக்காவின் எத்தியோப்பியா நாடு கடந்த பல ஆண்டுகளாக தன் எல்லைகள் அனைத்தையும் அண்டை நாடுகளுக்குத் திறந்துவிட்டிருப்பதை சுட்டிக்காட்டிய கூட்டேரஸ் அவர்கள், எத்தியோப்பியாவின் வரவேற்பால், பலர், இனப்படுகொலைகளிலிருந்து தப்பியுள்ளனர் என்று எடுத்துரைத்தார்.

மதம், இனம், நாடு என்ற பாகுபாடுகளைக் காட்டி, மனிதர்களைப் பிரிப்பது, அடிப்படைவாதத்தை இன்னும் கூடுதலாக வளர்ப்பதுடன், பாகுபாடுகள் காட்டும் நாடுகளின் பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றது என்று ஐ.நா. பொதுச்செயலர், வலியுறுத்திக் கூறினார்.

ஒரு சில நாடுகளின் இஸ்லாமியர், தன் நாட்டில் நுழைவதற்கு அனுமதி மறுத்து, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவர், டொனால்டு டிரம்ப் அவர்கள், கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அரசாணைக்கு, ஐ.நா. பொதுச்செயலர் கூட்டேரஸ் அவர்கள், தன் மறுப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.