2017-02-02 15:44:00

தடுப்பாணையை விரைவில் நீக்குவது நன்மை பயக்கும்


பிப்.02,2017. ஒரு நாட்டிலிருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோரை மீண்டும் அந்த நாட்டில் குடியேற்றுவது ஒன்றே நிரந்தர தீர்வு என்றும், இடைப்பட்ட காலத்தில் அவர்களுக்கு புகலிடம் அளிப்பது மனிதாபிமானம் என்றும், ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறினார்.

அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்கள், ஏழு நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியருக்கு, அமெரிக்க ஐக்கிய நாட்டில் நுழையும் அனுமதியை மறுத்திருப்பதையொட்டி, இப்புதனன்று கருத்து வெளியிட்ட கூட்டேரஸ் அவர்கள், இந்தத் தடுப்பாணையை விரைவில் நீக்குவது நன்மை பயக்கும் என்று கூறினார்.

உலகத் தீவிரவாதத்தை நீக்குவதற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படும் காரணம், தனக்கு ஏற்புடையது அல்ல என்றும், தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாரும், தங்கள் சொந்த நாட்டு கடவுச் சீட்டுடன் அமெரிக்க ஐக்கிய நாட்டில் நுழைவதில்லை, மாறாக, அவர்களில் பலர் ஐரோப்பிய கடவுச் சீட்டுடன் அந்நாட்டில் நுழைந்துள்ளனர் என்றும், கூட்டேரஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

துன்புறும் மனித சமுதாயத்திற்கு உதவிகள் செய்வதில், அமெரிக்க ஐக்கிய நாடு, பல முயற்சிகள் மேற்கொண்டு வந்துள்ளது என்றும், தற்போது, இந்த அரசாணை வழியே மனிதாபிமான உதவிகள் நிறுத்தப்பட்டிருப்பது, கவலையைத் தருகிறது என்றும், ஐ.நா. பொதுச்செயலர் கூட்டேரஸ் அவர்கள், செய்தியாளர்களிடம் கூறினார். 

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.