2017-02-03 16:00:00

இலங்கை மாற்றுத்திறனாளிகள் - சுதந்திர தினம் இல்லை


பிப்.03,2017. இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 69 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், மாற்றுத்திறனாளிகளின் அடிப்படை உரிமைகள் சரியான முறையில் பாதுகாக்கப்படவில்லை என்று வடமாநில மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களின் ஒன்றியத்தலைவர் வெ.சுப்பிரமணியம் அவர்கள், செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 4, இச்சனிக்கிழமை இடம்பெறவுள்ள 68வது சுதந்திர தினத்தையொட்டி கிளிநொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியம் அவர்கள்,  மாற்றுத்திறானிகளின் அடிப்படை உரிமையாகிய நடமாடும் சுதந்திரம்கூட இன்னும் சரியான முறையில் உறுதிப்படுத்தப்படவில்லை என கூறியுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பதாகத் தாங்கள் உணர்ந்துள்ளதால், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த சுதந்திர தினத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும், அதேவேளை சுதந்திர தினத்தை தாங்கள் புறக்கணிக்கவோ அல்லது அதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடவோ எந்தவிதமான தீ;ர்மானங்களையும் எடுக்கவில்லை என்றும் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

மாற்றுத்திறனாளிகளின் அரசியல் மற்றும் வாக்களிக்கும் சுதந்திரம், நடமாடும் சுதந்திரம், தகவல் அறியும் சுதந்திரம் ஆகியவற்றை உறுதிசெய்ய வேண்டும் என்று, வட மாநில மாற்றுத்திறனாளிகளுக்காகச் செயற்படுகின்ற ஒன்பது அமைப்புக்களின் பிரதிநிதிகள், இச்சந்திப்பில் சுட்டிக்காட்டினர்.

தொலைக்காட்சி செய்திகளை, செவிப்புலனற்றவர்களும் அறிந்து பயன்பெறும் வகையில், சைகை மொழியில் அவை ஒளிபரப்புச் செய்யப்படுவதில்லை. இதனால் இந்த மாற்றுத்திறனாளிகளின் தகவல் அறியும் சுதந்திரம் மறுக்கப்படுகின்றது என, இந்த ஊடக சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

ஆதாரம் : BBC / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.